ADDED : ஆக 13, 2026 10:06 PM

லாகோஸ்: காமன்வெல்த் வாள் சண்டை தொடரில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நைஜீரியாவில், காமன்வெல்த் வாள் சண்டை சாம்பியன்ஷிப் (23 வயது, சீனியர்) நடந்தது. இதன் 4வது, கடைசி நாளில், 6 சீனியர் பிரிவு போட்டிகள் நடந்தன. பெண்கள் தனிநபர் சாப்ரே பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ஷ்ருதி, அணிகளுக்கான பிரிவில் தங்கம் வென்றார். தவிர, 'சாப்ரே', 'எப்பி' பிரிவுகளில் ஆண்கள், பெண்கள், 'பாய்ல்' பெண்கள் பிரிவுகளில், இந்தியாவுக்கு 5 தங்கம் கிடைத்தது. ஆண்கள் 'பாய்ல்' பிரிவில் மட்டும் வெள்ளி கிடைத்தது.
கடைசி நாளில் 5 தங்கம், ஒரு வெள்ளி வென்ற இந்தியா, ஒட்டுமொத்தமாக 13 தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என, 35 பதக்கம் கைப்பற்றியது. இதன்மூலம் இத்தொடரில் முதல் முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது இந்தியா.
இந்திய வாள் சண்டை சங்க பொது செயலர் ராஜீவ் மேத்தா கூறுகையில், ''முதல் முறையாக காமன்வெல்த் சாம்பியன் பட்டத்தை வென்றது, இந்திய வாள் சண்டை நட்சத்திரங்களில் திறமை, கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு,'' என்றார்.
