UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 09:36 PM

ஜோகோவிச் ஏமாற்றம்
பசல்: சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7–6, 5–7, 6–7 என, ஜெர்மனியின் ஜான்–லெனார்ட் ஸ்டரப்பிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம் ஏ.டி.பி., ஒற்றையரில் அதிக பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் (103 பட்டம்) பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தார் ஜோகோவிச் (102).
ரிபாகினா விலகல்
டோக்கியோ: ஜப்பானில், டபிள்யு.டி.ஏ., பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில், உலகின் ‘நம்பர்–1’ கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் மோத இருந்தனர். ஆனால் காயம் காரணமாக ரிபாகினா விலகியதால், கனடா வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு காலிறுதியில் கனடாவின் டயானா ஷ்னைடர் 2–6, 7–6, 6–4 என பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலாவை வீழ்த்தினார்.
பார்சிலோனா கோல் மழை
கோகே: ஐரோப்பிய பெண்களுக்கான சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து 26வது சீசன் நடக்கிறது. டென்மார்க்கில் நடந்த லீக் போட்டியில், பார்சிலோனா (ஸ்பெயின்), கோகே (டென்மார்க்) அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த பார்சிலோனா 8–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் நடந்த பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் (பிரான்ஸ்), மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள் மோதிய போட்டி 1–1 என, ‘டிரா’ ஆனது.
