/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஷா'காரி முதல் தங்கம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் அசத்தல்
/
ஷா'காரி முதல் தங்கம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் அசத்தல்
ஷா'காரி முதல் தங்கம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் அசத்தல்
ஷா'காரி முதல் தங்கம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் அசத்தல்
ADDED : ஆக 10, 2024 11:28 PM

பாரிஸ்: அமெரிக்க வீராங்கனை ஷா'காரி ரிச்சர்ட்சன் ஒலிம்பிக்கில் தனது முதல் தங்கம் வென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் இலக்கை 41.78 வினாடியில் அடைந்த அமெரிக்க அணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. அமெரிக்க அணியில் இடம் பிடித்திருந்த ஷா'காரி ரிச்சர்ட்சன், ஒலிம்பிக்கில் தனது முதல் தங்கத்தை கைப்பற்றினார். தவிர இது, இவரது 2வது ஒலிம்பிக் பதக்கம் ஆனது. 100 மீ., ஓட்டத்தில் 'உலக சாம்பியன்' பட்டம் வென்ற இவர், பாரிஸ் ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். அடுத்த இரு இடங்களை பிரிட்டன் (41.85 வினாடி), ஜெர்மனி (41.97 வினாடி) அணிகள் கைப்பற்றின.
* ஆண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் பந்தய துாரத்தை 37.50 வினாடியில் அடைந்த கனடா அணிக்கு தங்கம் கிடைத்தது. தென் ஆப்ரிக்கா (37.57 வினாடி), பிரிட்டனுக்கு (37.61) முறையே வெள்ளி, வெண்கலம் கிடைத்தன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலகின் 'மின்னல் வேக' நோவா லைல்ஸ் இல்லாமல் களமிறங்கிய அமெரிக்க அணியினர் 'பேடனை' மாற்றி வழங்கியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதன்மூலம் ஒலிம்பிக் அரங்கில் 20 ஆண்டுகளாக இப்பிரிவில் அமெரிக்க வீரர்கள் பதக்கம் வெல்ல முடியாமல் ஏமாற்றினர். கடைசியாக 2004ல் நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ஜஸ்டின் காட்லின் அடங்கிய அமெரிக்க அணி வெள்ளி வென்றிருந்தது.
ராய் பெஞ்சமின் 'தங்கம்'
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனல் நடந்தது. இதில் பந்தய துாரத்தை 46.46 வினாடியில் அடைந்த அமெரிக்காவின் ராய் பெஞ்சமின் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, ஒலிம்பிக் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இவரது 2வது பதக்கம். ஏற்கனவே இவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று உலக சாதனை படைத்த நார்வேயின் கார்ஸ்டன் வார்ஹோம் (47.06 வினாடி) வெள்ளி வென்றார். பிரேசிலின் அலிசன் டோஸ் சான்டோஸ் (47.26 வினாடி) வெண்கலம் கைப்பற்றினார்.
'பிரேக்டான்ஸ்': ஜப்பானுக்கு முதல் தங்கம்
பாரிஸ் ஒலிம்பிக்கில் 'பிரேக்டான்ஸ்' ('பிரேக்கிங்') போட்டி அறிமுகமானது. பெண்களுக்கான 'பி-கேர்ள்' பிரிவில் ஜப்பானின் அமி யுவாசா தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் 'பிரேக்டான்ஸ்' போட்டியில் தங்கம் வென்ற முதல் நட்சத்திரமானார். அடுத்த இரு இடங்களை லிதுவேனியாவின் டொமினிகா பனேவிச், சீனாவின் லியு கிங்யி கைப்பற்றினர்.
பீச் வாலிபால்: பிரேசில் பிரமாதம்
பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான பீச் வாலிபால் பைனலில் பிரேசில், கனடா அணிகள் மோதின. பிரேசில் சார்பின் அனா பாட்ரிசியா, டுடா லிஸ்போவா பங்கேற்றனர். கனடா சார்பில் மெலிசா ஹுமானா-பரேடெஸ், பிரான்டி வில்கர்சன் களமிறங்கினர். அபாரமாக ஆடிய பிரேசில் அணி 2-1 (26-24, 12-21, 15-10) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றது.
இதன்மூலம் 1996க்கு பின், ஒலிம்பிக் பீச் வாலிபால் போட்டியில் பிரேசில் பெண்கள் அணிக்கு தங்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 1996ல் நடந்த அட்லாண்டா ஒலிம்பிக்கில் பிரேசிலின் சான்ட்ரா பைர்ஸ், ஜாக்கி சில்வா தங்கம் வென்றிருந்தனர். வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 2-0 என ஆஸ்திரலியாவை வீழ்த்தியது.