ADDED : ஆக 02, 2024 11:52 PM

பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் 'தனிநபர் ஆல்-அரவுண்டு' பிரிவு தகுதிச் சுற்றில் அமெரிக்காவின் சிமோன் பைனல்ஸ், 59.566 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அடுத்த நடந்த பைனலிலும் ஆதிக்கம் செலுத்திய இவர், 59.131 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, பாரிஸ் ஒலிம்பிக்கில் இவரது 2வது தங்கம். ஏற்கனவே 'ஆல்-அரவுண்டு' அணிகள் பிரிவில் இவர் இடம் பெற்றிருந்த அமெரிக்கா தங்கம் வென்றது. இதன்மூலம் ஒலிம்பிக் அரங்கில் சிமோன் பைனல்ஸ், தனது 6வது தங்கம் வென்றார். இதுவரை 6 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் 9 பதக்கம் வென்றுள்ளார்.
தடகளம்: அரையிறுதியில் ஷாகாரி
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் 'நடப்பு உலக சாம்பியன்' அமெரிக்காவின் ஷாகாரி ரிச்சர்ட்சன், இலக்கை 10.94 வினாடியில் கடந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஜமைக்காவின் ஷெல்லி-ஆன் பிரேசர்-பிரைஸ், பந்தய துாரத்தை 10.92 வினாடியில் அடைந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
நீச்சல்: வெள்ளி வென்றார் லெடிக்கி
பெண்களுக்கான நீச்சல் போட்டி 4x200 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு பைனலில் இலக்கை 7 நிமிடம், 38.08 வினாடியில் அடைந்த ஆஸ்திரேலிய அணி ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றது. கேட்டி லெடிக்கி இடம் பெற்ற அமெரிக்க அணி (7 நிமிடம், 40.86 வினாடி) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. சீனாவுக்கு (7 நிமிடம், 42.34 வினாடி) வெண்கலம் கிடைத்தது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் லெடிக்கி, தனது 3வது பதக்கம் வென்றார். ஏற்கனவே 1500 மீ., 'பிரீஸ்டைல்' (தங்கம்), 400 மீ., 'பிரீஸ்டைல்' (வெண்கலம்) பிரிவில் பதக்கம் வென்றிருந்தார். தவிர இது, இவரது 13வது ஒலிம்பிக் பதக்கம் ஆனது. இதுவரை 8 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் அரங்கில் அதிக பதக்கம் கைப்பற்றியவர்கள் பட்டியலில் 5வது இடம் பிடித்தார். முதலிடத்தில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் (28 பதக்கம்) உள்ளார். தவிர ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் அதிக பதக்கம் வென்ற வீராங்கனையானார் லெடிக்கி. அடுத்த இடத்தில் அமெரிக்காவின் ஜென்னி தாம்ப்சன் (12 பதக்கம்) உள்ளார்.