/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சீனாவை வீழ்த்தியது தென் கொரியா: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில்
/
சீனாவை வீழ்த்தியது தென் கொரியா: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில்
சீனாவை வீழ்த்தியது தென் கொரியா: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில்
சீனாவை வீழ்த்தியது தென் கொரியா: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில்
ADDED : டிச 08, 2025 11:19 PM

மதுரை: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் தென் கொரிய அணி 5-4 என, சீனாவை வீழ்த்தியது.
சென்னை, மதுரையில், ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் நடக்கிறது. நேற்று, மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடந்த 19-20வது இடத்துக்கான போட்டியில் சீனா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் தென் கொரிய அணி 5-4 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று 19வது இடம் பிடித்தது. சீனாவுக்கு 20வது இடம் கிடைத்தது.
அடுத்து நடந்த 17-18வது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரியா, வங்கதேசம் அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி 5-4 என 'திரில்' வெற்றி பெற்று, 17வது இடம் பிடித்தது. ஆஸ்திரியா 18வது இடம் பெற்றது. வங்கதேசத்தின் அமிருல் 'ஹாட்ரிக்' கோல் அடித்தார்.
பின், 21-22வது இடத்துக்கான போட்டியில் கனடா, எகிப்து அணிகள் மோதின. இப்போட்டி, ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. பின், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய எகிப்து அணி 3-2 என வெற்றி பெற்று, 21வது இடத்தை தட்டிச் சென்றது. கனடாவுக்கு 22வது இடம் கிடைத்தது.
அடுத்து நடந்த 23-24வது இடத்துக்கான போட்டியில் நமீபியா, ஓமன் அணிகள் மோதின. இதில் நமீபியா 4-2 என வெற்றி பெற்று, 23வது இடத்தை கைப்பற்றியது. ஓமன் 24வது இடம் பிடித்தது.
மதுரையில் ஜூனியர் உலகக்கோப்பை தொடருக்கான போட்டிகள் நிறைவு பெற்றன. பைனல் (டிச. 10), இந்தியா-அர்ஜென்டினா மோதும் மூன்றாவது இடம் (டிச. 10) உட்பட மற்ற போட்டிகள் சென்னையில் நடக்கவுள்ளன.
வெண்கலம் இலக்கு: ஸ்ரீஜேஷ்
சென்னையில் நடந்த அரையிறுதியில் இந்திய அணி 1-5 என, 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. நாளை நடக்கவுள்ள 3-4வது இடத்துக்கான போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தினால் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைக்கும்.
இதுகுறித்து இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ் கூறுகையில், ''ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. எதிரணிக்கு துவக்கத்தில் இருந்தே எளிதாக கோல் அடிக்கும் வாய்ப்புகளை வழங்கி தவறு செய்துவிட்டோம். முதலில் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தி, பின் தாக்குதல் பாணியில் விளையாடி இருக்க வேண்டும். அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் இத்தவறுகளை திருத்திக் கொண்டு, வெண்கலப்பதக்கம் வெல்வதே இலக்கு,'' என்றார்.

