ADDED : டிச 08, 2025 10:05 PM

பிரேசில் பிரமாதம்
பாசிக்: பிலிப்பைன்சில், பெண்களுக்கான உலக கோப்பை 'புட்சால்' கால்பந்து முதல் சீசன் நடந்தது. இதன் பைனலில் போர்ச்சுகல், பிரேசில் அணிகள் மோதின. பிரேசில் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஸ்பெயின் அணி 5-1 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
காலிறுதியில் நார்வே
டார்ட்மண்ட்: ஜெர்மனி, நெதர்லாந்தில், பெண்களுக்கான உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 27வது சீசன் நடக்கிறது. இதன் 'குரூப்-4' லீக் போட்டியில் நார்வே அணி 33-14 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது. லீக் சுற்றின் முடிவில், இப்பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த நார்வே (10 புள்ளி), பிரேசில் (8) அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
சீனா 'தங்கம்'
செங்டு: சீனாவில், கலப்பு அணிகளுக்கான உலக கோப்பை டேபிள் டென்னிஸ் 3வது சீசன் நடந்தது. இதன் பைனலில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் சீன அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' தங்கம் (2023-2025) வென்றது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனி அணி 3-2 என தென் கொரியாவை வீழ்த்தியது.
மாட்ரிட் தோல்வி
மாட்ரிட்: ஸ்பெயினில் நடக்கும் 'லா லிகா' கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், செல்டா விகோ அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய ரியல் மாட்ரிட் அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. வாலன்சியா, செவில்லா அணிகள் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
எக்ஸ்டிராஸ்
* கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த உலக கோப்பை பைனல் துப்பாக்கி சுடுதல் தொடருக்கான, 'டிராப்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஜோராவர் சிங் சாந்து (119 புள்ளி), 6வது இடம் பிடித்தார். பைனலில் ஏமாற்றிய இவர் (7 புள்ளி) 7வது இடம் பிடித்தார். இந்தியாவுக்கு 2 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 6 பதக்கம் கிடைத்தது.
* டில்லியில் நடந்த இந்திய பிக்கிள்பால் லீக் தொடருக்கான பைனலில் மும்பை அணி 5-1 என்ற கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
* கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (கே.எஸ்.சி.ஏ.,) புதிய தலைவராக, முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் 56, தேர்வானார். இதற்கான தேர்தலில் வெங்கடேஷ் பிரசாத் 191 வாக்குகள் வித்தியாசத்தில் (749-558), ஷாந்த் குமாரை வென்றார்.
* நேபாள தலைநகர் காத்மண்டுவில் நடந்த பெண்களுக்கான தெற்காசிய கிளப் கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில், இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால் அணி 4-0 என, பூடானின் டிரான்ஸ்போர்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

