ADDED : ஆக 14, 2026 10:52 PM

டொரான்டோ: கனடாவில், பெண்களுக்கான 'நேஷனல் பாங்க்' ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பைனலில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-2, 6-3 என வெற்றி பெற்றார். நடப்பு சீசனில் முதல் முறையாக கோப்பை வென்ற ஸ்வியாடெக், ஒட்டுமொத்தமாக 26வது ஒற்றையர் பட்டத்தை தட்டிச் சென்றார். தவிர இது, டபிள்யு.டி.ஏ., 1000 அந்தஸ்து பெற்ற தொடரில் ஸ்வியாடெக் கைப்பற்றிய 12வது பட்டம்.
அமி ஹன்ட் கலக்கல்
பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காமில், ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில், பந்தய துாரத்தை 22.19 வினாடியில் கடந்த பிரிட்டனின் அமி ஹன்ட் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, இம்முறை இவர் கைப்பற்றிய 2வது தங்கம். ஏற்கனவே 100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்த இவர், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் அரங்கில் தனது 3வது தங்கத்தை கைப்பற்றினார். இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கங்களுடன் பிரிட்டன் அணி முதலிடத்தில் உள்ளது.
எக்ஸ்டிராஸ்
* வலது கால் தொடையின் பின்பகுதியில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 25, ஆசிய கோப்பை (ஆக. 28 - செப். 13, துபாய்), ஆசிய விளையாட்டில் (செப். 19 - அக். 4, ஜப்பான்) இருந்து விலகினார். இவருக்கு மாற்றாக பிரதிகா ராவல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில், பெண்களுக்கான கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதில் திவ்யா (இந்தியா) - காரிஸ்சா யிப் (அமெரிக்கா), கோனேரு ஹம்பி (இந்தியா) - அனா முசிசுக் (உக்ரைன்) மோதிய 4வது சுற்று போட்டிகள் 'டிரா' ஆனது. மற்றொரு இந்திய வீராங்கனை வைஷாலி, சீனாவின் டான் ஜோங்யியிடம் தோல்வியடைந்தார்.
* பெண்களுக்கான சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப், வரும் நவ. 2-8ல் நடக்கவுள்ளது.
* ''ஆசியன் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி விலகியது தவறான முடிவு. பிரேசில் அணி இலவசமாக நட்பு போட்டியில் பங்கேற்கவில்லை. ஆனால், ரூ. 50-70 கோடி பெற்றுக்கொண்டு விளையாட உள்ளது. ஐ.எஸ்.எல்., மற்றும் 'ஐ-லீக்' அணிகள் பொருளாதார பிரச்னையில் சிக்கி தவிக்கும் இந்த நேரத்தில் இது சரியானதல்ல,'' என, முன்னாள் இந்திய கேப்டன் பாய்ச்சங் பூட்யா தெரிவித்துள்ளார்.
