முதல் பதக்கம் வெல்லுமா இந்தியா * நாளை உலக கோப்பை ஹாக்கி துவக்கம்
முதல் பதக்கம் வெல்லுமா இந்தியா * நாளை உலக கோப்பை ஹாக்கி துவக்கம்
ADDED : ஆக 13, 2026 11:08 PM

புதுடில்லி: ''உலக கோப்பை ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி முதல் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது,'' என கோல் கீப்பர் சவிதா தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) சார்பில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடத்தப்படுகிறது. இதன் 16வது சீசன், வரும் ஆக. 14-30ல் பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் ஆண்கள் (16 அணிகள்), பெண்கள் (16) பிரிவுகளில் நடக்க உள்ளது.
இந்திய பெண்கள் அணி, 'டி' பிரிவில் இங்கிலாந்து, சீனா, தென் ஆப்ரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது. வரும் ஆக. 16ல் முதல் போட்டியில் இந்தியா, சீனாவை சந்திக்க உள்ளது.
இதுகுறித்து, மூன்றாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கும், இந்திய பெண்கள் அணி கோல் கீப்பர் சவிதா புனியா 36, கூறியது:
எப்.ஐ.எச்., சார்பில் சமீபத்தில் நியூசிலாந்தில் நடந்த நேஷன்ஸ் கோப்பை தொடரில், இந்தியா சாம்பியன் ஆனது. இது பெரிய சாதனை. ஏனெனில் உலகின் பல்வேறு முன்னணி அணிகள் இதில் பங்கேற்றன. போட்டி கடுமையாக இருந்தன. இத்தொடரில் தங்கம் வென்றது, இந்திய பெண்கள் அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பின் இதுபோல சாதித்தது, அணியின் மன உறுதி, தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஏனெனில் உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக, எங்களால் சவால் கொடுக்க முடியும் என்பதை இத்தொடர் உணர்த்தியது. எந்த ஒரு நாளிலும், எந்த ஒரு சிறந்த அணிக்கு எதிராகவும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதே வேகத்தில் உலக கோப்பை தொடரில் களமிறங்குகிறோம். எங்களது திறமைக்கு ஏற்ப விளையாடி, திட்டமிட்டு செயல்பட்டால், முதல் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஏற்கனவே இரண்டு உலக கோப்பை தொடரில் பங்கேற்ற அனுபவம் உள்ளது. இதைப் பயன்படுத்தி அணியின் வெற்றிக்கு கைகொடுக்க முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாம்பியனாக விளையாடுங்கள்
உலக கோப்பை கிரிக்கெட் (2011, சாம்பியன்), பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024, வெண்கலம்) இந்தியா சாதித்த போது அணியின் மனநல ஆலோசகராக இருந்தவர் பேடி ஆப்டன்.
தற்போதும் ஆலோசகராக உள்ள அவர் கூறுகையில்,'' பொதுவாக, சாம்பியனாக விரும்பும் அணியினர் பைனலில் வென்று, சாதிக்கும் வரை காத்திருக்க விரும்புவதில்லை. தொடரில் களமிறங்கும் போதே, தாங்கள் சாம்பியன் என்ற மனநிலையுடன் தான் விளையாடுவர். இதுபோல இந்திய அணியினர் சாம்பியன்களுக்கான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பைனல் செல்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களை புறக்கணிக்க வேண்டும்,'' என்றார்.
இதுவரை சாம்பியன்
உலக கோப்பை ஹாக்கி (ஆண்கள்) அரங்கில் இந்தியா (1975) இதுவரை ஒரு முறை மட்டும் சாம்பியன் ஆனது. மற்றபடி, பாகிஸ்தான் அதிகபட்சம் 4 முறை (1971, 1978, 1982, 1994) சாம்பியன் ஆனது. அடுத்த இடத்தில் தலா 3 முறை கோப்பை வென்ற நெதர்லாந்து (1973, 1990, 1998), ஆஸ்திரேலியா (1986, 2010, 2014), ஜெர்மனி (2002, 2006, 2023) அணிகள் உள்ளன. தவிர, பெல்ஜியம் (2018) ஒரு முறை சாம்பியன் ஆனது.
* பெண்களுக்கான பிரிவில், 9 முறை சாம்பியன் ஆன, நெதர்லாந்து அணி (1974, 1978, 1983, 1986, 1990, 2006, 2014, 2018, 2022) முதலிடத்தில் உள்ளது. அர்ஜென்டினா (2002, 2010), ஆஸ்திரேலியா (1994, 1998), ஜெர்மனி (1976, 1981) அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றன.
