ADDED : ஆக 13, 2026 11:03 PM

செயின்ட் லுாயிஸ்: கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடரில் திவ்யா, இரண்டாவது வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் பெண்களுக்கான கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. மொத்த பரிசுத் தொகை ரூ. 2.39 கோடி. உலக கோப்பை செஸ் சாம்பியன், இந்தியாவின் திவ்யா, கோனேரு ஹம்பி, வைஷாலி உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். நேற்று மூன்றாவது சுற்று நடந்தன. திவ்யா, முன்னாள் உலக சாம்பியன், சுவிட்சர்லாந்தின் அலெக்சாண்ட்ராவை சந்தித்தார்.
கருப்பு நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 10 வது நகர்த்தலில் இருந்து முன்னிலை பெற்றார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட திவ்யா, 55 நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
வைஷாலி, கிரீசின் ஸ்டாவ்ரவுலா மோதிய போட்டி 37 நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஹம்பி, அமெரிக்காவின் காரிஸ்சா மோதிய மற்றொரு போட்டியும் 'டிரா' ஆனது.
மூன்று சுற்று முடிவில் சீனாவின் டான் ஜோங்யி, அமெரிக்காவின் அலைஸ் தலா 2.5 புள்ளியுடன் முதல் இரு இடத்தில் உள்ளனர். 6வது இடத்தில் இருந்த திவ்யா (2.0), 3வது இடத்துக்கு முன்னேறினார். ஹம்பி (1.0) 8, வைஷாலி (1.0) 9வது இடத்தில் தொடர்கின்றனர்.
