/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தைவான் ஓபன் தடகளம்: தமிழக 'தங்கம்' வித்யா
/
தைவான் ஓபன் தடகளம்: தமிழக 'தங்கம்' வித்யா
ADDED : ஜூன் 08, 2025 11:31 PM

தைபே சிட்டி: தைவான் ஓபன் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா தங்கம் வென்றார்.
சீனதைபேயில், தைவான் தடகள ஓபன் நடந்தது. பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில், தமிழகத்தின் வித்யா ராம்ராஜ்(56.53 வினாடி) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். நடப்பு ஆண்டில், தனது 3வது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார் வித்யா. சமீபத்தில், பெடரேஷன் கோப்பை (56.04 வினாடி), ஆசிய சாம்பியன்ஷிப் (56.46) பைனலில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
ஆண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில் யாஷஸ் பாலக் ஷா (49.22 வினாடி) வெள்ளி வென்றார்.
800 மீ., ஓட்டம்: பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் இலக்கை 2 நிமிடம், 02.79 வினாடியில் கடந்த இந்தியாவின் பூஜா, புதிய சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வென்றார். இது, இத்தொடரில் இவரது 2வது தங்கம். ஏற்கனவே 1500 மீ., ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை டிவிங்கிள் சவுத்தரி (2 நிமிடம், 06.96 வினாடி) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 48.46 வினாடியில் கடந்த இந்தியாவின் கிருஷ்ணன் குமார், தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
தொடர் ஓட்டம்: ஆண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் விஷால், தரம்வீர் சவுத்தரி, சந்தோஷ், மானு அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. பந்தய துாரத்தை 3 நிமிடம், 05.58 வினாடியில் கடந்த இந்திய அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஈட்டி எறிதல்: ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இந்தியாவின் ரோகித் யாதவ் (74.42 மீ.,) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இந்தியாவின் அன்னு ராணி (56.82 மீ.,) தங்கம் வென்றார்.
நீளம் தாண்டுதல்: பெண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் இந்தியாவின் ஆன்சி ஜோசன், ஷைலி சிங் பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக 6.41 மீ., தாண்டிய ஷைலி சிங், 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஆன்சி (6.39 மீ.) வெண்கலத்தை உறுதி செய்தார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 12 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 16 பதக்கம் கிடைத்தது.