UPDATED : ஆக 26, 2025 11:21 AM
ADDED : ஆக 26, 2025 05:48 AM

சென்னை : சிறிய அளவிலான விதிமீறல்களுக்கான தண்டனைகளை ரத்து செய்வதற்காக, ஆறு சட்டங்களில் திருத்தம் செய்ய, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில், வாடகை வீட்டுவசதி, அடுக்குமாடி குடியிருப்பு உரிமைகள் போன்ற பிரிவுகளில், தனித்தனி சட்டங்கள் உள்ளன. இந்தச் சட்டங்களில், பல்வேறு விதிமீறல்கள் குற்றங்களாக வரையறுக்கப் பட்டு உள்ளன.
அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு, வணிக நடவடிக்கைகளில் எவ்வித தடையும் இருக்கக்கூடாது. இதற்கு தடையாக உள்ள விஷயங்களை சரி செய்ய, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதன் அடிப்படையில், துறை வாரியாக சட்டங்களில் உள்ள சில கடுமையான விதிகளை தளர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள, அந்தந்த துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வகையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில், ஆறு சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீட்டுவசதி வாரிய சட்டம், குடிசை பகுதிகள் மேம்பாடு சட்டம் உள்ளிட்ட, ஆறு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதில் சிறிய அளவிலான விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச தண்டனைகளை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளோம்.
உதாரணமாக, வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டில் வீடு பெற்றவர், அதில் அனுமதி இன்றி, கூடுதல் பகுதிகள் கட்டினால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமீறல் தொடர்ந்தால், ஒவ்வொரு நாளுக்கும், 100 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த தண்டனை, தற்போதைய சூழலில் தேவை இல்லை என, வாரியம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி, வீட்டுவசதி தொடர்பான, ஆறு சட்டங்களில், 14 பிரிவுகளை திருத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
குறிப்பாக, வீட்டுவசதி வாரிய சட்டத்தில் மட்டும், ஏழு பிரிவுகள் திருத்தப்பட உள்ளன. இது தொடர்பான வரைவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சட்ட திருத்த மசோதாக்கள் தயாரிக்கப்பட்டு, வரும் சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.