/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தமிழக சாதனையாளர்: சரத் கமல் விஸ்வரூபம்
/
தமிழக சாதனையாளர்: சரத் கமல் விஸ்வரூபம்
ADDED : ஏப் 13, 2024 11:20 PM

சர்வதேச டேபிள் டென்னிஸ் அரங்கில் தமிழகத்தின் அஜந்தா சரத் கமல் 41, ஜொலிக்கிறார். நான்கு வயதில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் காலடி வைத்தார். 2003ல் முதன்முறையாக சீனியர் தேசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் 10 முறை பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.
மலேசியாவில் நடந்த காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (2004) ஒற்றையரில் தங்கம் வென்றார். இது, சர்வதேச அரங்கில் ஒற்றையர் பிரிவில் இவர் கைப்பற்றிய முதல் பதக்கம். இதற்கு பின் சர்வதேச போட்டிகளில் விஸ்வரூபம் எடுத்த இவர், பதக்க மழை பொழிந்தார். 2004ல் ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
கடந்த 2010ல் எகிப்து ஓபன் ஒற்றையரில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற சரத் கமல், ஐ.டி.டி.எப்., புரோ டூர் பட்டம் வென்ற முதல் இந்தியரானார். காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் பதக்கங்களை வென்றார். நான்கு முறை (2004, 2012, 2016, 2020) ஒலிம்பிக்கில் பங்கேற்றார். இந்த ஆண்டு நடக்கவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளார். துவக்க விழாவில் இந்திய மூவர்ணக் கொடி ஏந்தி வர உள்ளார். இதில் சாதிக்கும் பட்சத்தில் ஒலிம்பிக் பதக்கத்துடன் டேபிள் டென்னிஸ் அரங்கில் இருந்து விடைபெறலாம்.
வென்ற பதக்கம்
காமன்வெல்த் விளையாட்டு: 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்
ஆசிய விளையாட்டு: 2 வெண்கலம்
ஆசிய சாம்பியன்ஷிப்: 3 வெண்கலம்
விருது
அர்ஜுனா: 2004
பத்ம ஸ்ரீ: 2019
கேல் ரத்னா: 2022
பயோ-டேட்டா
பெயர்: அஜந்தா சரத் கமல்
பிறந்த தேதி/இடம்: 12.7.1982, சென்னை
விளையாட்டு: டேபிள் டென்னிஸ்
உலக ரேங்கிங்: 37வது இடம்

