/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு இரண்டு தங்கம்: செஸ் ஒலிம்பியாட்டில் புதிய வரலாறு
/
இந்தியாவுக்கு இரண்டு தங்கம்: செஸ் ஒலிம்பியாட்டில் புதிய வரலாறு
இந்தியாவுக்கு இரண்டு தங்கம்: செஸ் ஒலிம்பியாட்டில் புதிய வரலாறு
இந்தியாவுக்கு இரண்டு தங்கம்: செஸ் ஒலிம்பியாட்டில் புதிய வரலாறு
ADDED : செப் 22, 2024 11:16 PM

புடாபெஸ்ட்: செஸ் ஒலிம்பியாட் ஓபன், பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று வரலாறு படைத்தன.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், செஸ் ஒலிம்பியாட் 45வது சீசன் நடந்தது. இதன் ஓபன் பிரிவு 10வது சுற்றில் இந்திய அணி 2.5 - 1.5 என அமெரிக்காவை வீழத்தியது. பத்து சுற்றுகளின் முடிவில் 19 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் நீடித்தது.
இதன் 11வது, கடைசி சுற்றில் இந்தியா, சுலோவேனியா அணிகள் மோதின. இந்தியா சார்பில் அர்ஜுன் எரிகைசி, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, பிரக்ஞானந்தா, குகேஷ் பங்கேற்றனர். முதல் போட்டியில் அர்ஜுன், சுலோவேனியாவின் ஜான் சுபெல்ஜ் மோதினர். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் 49வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
அடுத்த போட்டியில் குகேஷ், சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவ் மோதினர். கறுப்பு நிற காய்களுடன் பங்கேற்ற குகேஷ், 48வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனையடுத்து இந்தியாவின் தங்கப்பதக்கம் உறுதியானது. தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு தமிழகத்தின் பிரக்ஞானந்தா வெற்றி தேடித்தந்தார். விதித் சந்தோஷ், தனது ஆட்டத்தை 'டிரா' செய்தார். முடிவில் இந்திய அணி 3.5 - 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஓபன் பிரிவில் 11 சுற்றுகளின் முடிவில் 21 புள்ளிகளுடன் (10 வெற்றி, ஒரு 'டிரா') முதலிடத்தை கைப்பற்றிய இந்தியா, முதன்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது. இதற்கு முன் 2014, 2022ல் வெண்கலம் வென்றிருந்தது.
பெண்கள் அபாரம்
பெண்கள் பிரிவு 10வது சுற்றில் இந்திய அணி 2.5 - 1.5 என சீனாவை வென்றது. பத்து சுற்றின் முடிவில் இந்திய அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தை கஜகஸ்தானுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
இதன் 11வது, கடைசி சுற்றில் இந்தியா, அஜர்பைஜான் மோதின. இதில் இந்திய அணி 3.5 - 0.5 என வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஹரிகா, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் வெற்றி பெற்றனர். தமிழக வீராங்கனை வைஷாலி, 'டிரா' செய்தார்.
பெண்கள் பிரிவில் 11 சுற்றுகளின் முடிவில் 19 புள்ளிகளுடன் (9 வெற்றி, ஒரு 'டிரா', ஒரு தோல்வி) முதலிடத்தை கைப்பற்றிய இந்தியா, முதன்முறையாக தங்கம் வென்று சாதித்தது.