ADDED : ஆக 27, 2026 09:47 PM

நியூயார்க்: அமெரிக்காவில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் பைனலில், செக்குடியரசின் கரோலினா முசோவா, ஜாகுப் மென்சிக் ஜோடி, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், இத்தாலியின் பிளவியோ கோபோலி ஜோடியை சந்தித்தது. இதில் முசோவா-மென்சிக் ஜோடி 6-3, 1-6, 10-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபன் கலப்பு இரட்டையரில் முதல் முறையாக கோப்பை வென்றது.
எம்பாப்வே 'ஹாட்ரிக்' கோல்
மாட்ரிட்: ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. மாட்ரிட் நகரில் நடந்த லீக் போட்டியில், ரியல் மாட்ரிட், ரியல் சோசிடாட் அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மாட்ரிட் அணிக்கு, பிரான்சின் எம்பாப்வே 'ஹாட்ரிக்' (40, 60, 80வது நிமிடம்), பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர் ஒரு கோல் (68வது) அடித்து கைகொடுத்தனர். சோசிடாட் அணிக்கு ஆஸ்திரியாவின் லுாகா சுசிச் (44வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.
எக்ஸ்டிராஸ்
* உஸ்பெகிஸ்தானில், ஆசிய கோப்பை கால்பந்து (17 வயது) 22வது சீசன் (2027, மே 12-29) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றில் 35 அணிகள், 5 பிரிவுகளாக பங்கேற்கின்றன. மலேசியாவில் நடக்கவுள்ள 'இ' பிரிவு போட்டியில் இந்திய அணி, சிங்கப்பூர் (நவ. 11), குவாம் (நவ. 14), பாலஸ்தீனம் (நவ. 27), மலேசியா (நவ. 20) அணிகளுடன் விளையாடுகிறது.
* இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலியா 'ஏ' பெண்கள் அணி, 3 'டி-20' (செப். 12, 15, 17, புதிய சண்டிகர்), 3 ஒருநாள் (செப். 20, 23, 25, மொகாலி), ஒரு நான்கு நாள் போட்டி (செப். 29 - அக். 2, தர்மசாலா) கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் பங்கேற்கும் இந்தியா 'ஏ' அணிகளுக்கு கேப்டனாக அனுஷ்கா சர்மா ('டி-20'), யஸ்திகா பாட்யா (ஒருநாள், நான்கு நாள்) நியமிக்கப்பட்டனர்.
* பெங்களூருவில், வரும் செப். 5ல் குளோபல் செஸ் லீக் 4வது சீசன் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள 'நடப்பு சாம்பியன்' ஆல்பைன் பைப்பர்ஸ் அணியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் இணைந்துள்ளார். இந்த அணியில் மாக்னஸ் கார்ல்சன் (நார்வே), அனிஷ் கிரி (நெதர்லாந்து), விதித் குஜ்ராத்தி (இந்தியா), வோலோடார் முர்சின் (ரஷ்யா) இடம் பெற்றுள்ளனர்.
* இந்தியா வரவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட ஆஸ்திரேலிய அணி, 3 ஒருநாள், 2 நான்கு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு (19 வயது), முன்னாள் வீரர்கள் டிராவிட், சேவக் மகன்களான முறையே அன்வே 17, ஆர்யவீர் 18, தேர்வு செய்யப்பட்டனர்.
