
வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் 'வேகப்புயல்' வில் ஓ' ரூர்க்கே 24, முதுகு பகுதி காயத்தால் அவதிப்படுகிறார். இதற்கு 'ஆப்பரேஷன்' தேவையில்லை. சில பயிற்சிகள், ஓய்வு மூலம் தேறிவிடலாம். முழுமையாக குணமடைய 3 மாதம் தேவைப்படும். அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடர்களில் பங்கேற்க முடியாது. வரும் டிசம்பரில் நடக்க இருக்கும் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு உண்டு.
ரசிகர் சத்தம் கேட்குதாநியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது ரசிகர்கள் எழுப்பும் சத்தம் சிலருக்கு எரிச்சலை தருகிறது. பெலாரஸ் வீராங்கனை சபலென்கா கூறுகையில்,''முதலில் குழப்பம் அடைந்தேன். போகப் போக பழகிவிட்டது,''என்றார். பிரான்ஸ் ரசிகர் அட்ரியன் கூறுகையில்,''விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபனில் ரம்மியமான சூழல் நிலவும். ரசிகர்கள் அமைதியாக இருப்பர். ஆனால், நியூயார்க் ஆர்தர் ஆஷ் மைதானத்தின் மேலே அவ்வப்போது விமானங்கள் பறக்கின்றன. ரசிகர்களின் கரகோஷம் என ஏதாவது ஒரு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது,''என்றார்.
ஏஞ்சலா காலமானார்லண்டன்: பிரிட்டனின் மூத்த டென்னிஸ் வீராங்கனை ஏஞ்சலா மார்டிமர் பாரட் 93, காலமானார். 1961ல் விம்பிள்டனில் சாம்பியனான இவர், மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர். செவித்திறன் குறைபாடு, அடிக்கடி உடல்நலன் பாதிப்பு போன்ற சோதனைகளை கடந்து போட்டிகளில் சாதித்தார். மனஉறுதிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்.