ADDED : மார் 16, 2024 10:27 PM

புதுடில்லி: இந்திய வீரர் ராம் பாபூ, பாரிஸ் ஒலிம்பிக் 20 கி.மீ., நடை போட்டிக்கான தகுதி இலக்கை அடைந்தார்.
சுலோவாகியாவில் சர்வதேச நடை போட்டி நடந்தது. ஆண்களுக்கான 20 கி.மீ., நடை போட்டியில் இந்தியாவின் ராம் பாபூ 24, பங்கேற்றார். ஆசிய விளையாட்டு (2022) 35 கி.மீ., நடை போட்டியில் வெண்கலம் வென்ற இவர், பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 20:00 நிமிடத்தில் அடைந்து 3வது இடம் பிடித்தார். தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்த இவர், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கை அடைந்தார். சர்வதேச தடகள கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம், 20 நிமிடம், 10 வினாடி, ஒலிம்பிக் தகுதி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இத்தொடரில் 'டாப்-3' பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தியரான ராம் பாபூ, பாரிஸ் ஒலிம்பிக் நடை போட்டிக்கான இலக்கை அடைந்த 7வது இந்திய வீரரானார். ஏற்கனவே ஆகாஷ்தீப் சிங், சூரஜ் பன்வார், செர்வின் செபாஸ்டியன், அர்ஷ்பிரீத் சிங், பிரம்ஜீத் பிஷ்ட், விகாஸ் சிங் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதிலிருந்து மூன்று பேர் மட்டும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவர். இந்திய வீராங்கனை சார்பில் பிரியங்கா கோஸ்வாமி மட்டும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
