/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
மனு பாகருக்கு வரவேற்பு: டில்லி விமான நிலையத்தில்
/
மனு பாகருக்கு வரவேற்பு: டில்லி விமான நிலையத்தில்
ADDED : ஆக 07, 2024 11:56 PM

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாகருக்கு, டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்சில் நடக்கும் பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாகர் 22, இரண்டு வெண்கலம் (10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர், கலப்பு அணி) வென்றார். இதன்மூலம் சுதந்திர இந்தியாவில், ஒரு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற இந்தியர் என்ற வரலாறு படைத்தார். தனிநபர் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு பைனலில் 4வது இடம் பிடித்து வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் மனு பாகர் தாயகம் திரும்பினார். நேற்று காலை, தனது பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவுடன் டில்லி வந்த இவருக்கு, மழையையும் பொருட்படுத்தாமல் விமான நிலையத்தின் நுழைவாயிலில் நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேளதாளத்துடன் நடனமாடிய ரசிகர்கள், மனு பாகருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். விமான நிலையத்தில் மனு பாகரின் பெற்றோர் ராம் கிஷான், சுமேதா, பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவின் தந்தை நாராயண் சிங் ராணாவும் இருந்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான நிறைவு விழா ஆக. 11ல் நடக்கவுள்ளது. இதன் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடி ஏந்தி வரவுள்ள மனு பாகர், ஆக. 10ல் மீண்டும் பாரிஸ் செல்லவுள்ளார்.