ADDED : ஜன 03, 2026 10:36 PM

புதுடில்லி: இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதுகு பகுதி காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 28. டோக்கியோவில் (2020) அசத்திய இவர், ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். பின், உலக சாம்பியன்ஷிப் (2023, புடாபெஸ்ட், தங்கம்), பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024, வெள்ளி) பதக்கம் வென்றார். இதையடுத்து சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் தடகளத்தில் தொடர்ச்சியாக 2 பதக்கம் வென்ற முதல் இந்தியரானார். தோகாவில் நடந்த டைமண்ட் லீக் தடகளத்தில் (2025, மே) அதிகபட்சமாக 90.23 மீ., எறிந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டோக்கியோவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதுகுப்பகுதி காயத்துடன் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 8வது இடம் பிடித்து ஏமாற்றினார். அதன்பின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வரத்தேவையான மறுவாழ்வு பயிற்சி மேற்கொண்டு வரும் இவர், எப்போது போட்டிக்கு திரும்புவார் என்பது தெரியவில்லை.
இந்திய தடகள கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளர் அடில் சுமாரிவல்லா கூறுகையில், ''முதுகுப்பகுதி காயத்தில் இருந்து மீண்டு வரும் நீரஜ் சோப்ரா, ஓய்வில் உள்ளார். காயத்தில் இருந்து பூரண குணமடைய தேவையான மறுவாழ்வு பயிற்சியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

