ADDED : பிப் 01, 2024 08:15 PM

புதுடில்லி: புரோ கபடி லீக் பைனல் வரும் மார்ச் 1ல் ஐதராபாத்தில் நடக்கிறது.
இந்தியாவில் புரோ கபடி லீக் 10வது சீசன் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' ஜெய்ப்பூர், தமிழ் தலைவாஸ், மும்பை, பெங்கால், பெங்களூரு, ஒடிசா உள்ளிட்ட 12 அணிகள் லீக் சுற்றில் பங்கேற்கின்றன. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். அடுத்த நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் 'எலிமினேட்டர்' போட்டியில் பங்கேற்கும்.
'பிளே-ஆப்' சுற்றுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 'எலிமினேட்டர்' (பிப். 26), அரையிறுதி (பிப். 28), பைனல் (மார்ச் 1) என அனைத்து போட்டிகளும் ஐதராபாத்தில் நடத்தப்படுகிறது. புள்ளிப்பட்டியலில் 3, 6வது இடம் பிடிக்கும் அணிகள் 'எலிமினேட்டர்-1'ல் மோதும். 4, 5வது இடம் பிடிக்கும் அணிகள் 'எலிமினேட்டர்-2'ல் விளையாடும்.
'எலிமினேட்டர்-1'ல் வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் அரையிறுதி-1ல் மோதும். 'எலிமினேட்டர்-2'ல் வெற்றி பெறும் அணி 2வது இடம் பிடிக்கும் அணியுடன் அரையிறுதி-2ல் விளையாடும். இதில் வெல்லும் அணிகள் மார்ச் 1ல் பைனலில் எதிர்கொள்ளும்.
இதுவரை முடிந்த போட்டிகளின் முடிவில் ஜெய்ப்பூர் அணி மட்டும் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.