/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பாராட்டு மழையில் 'உலக சாம்பியன்' குகேஷ்
/
பாராட்டு மழையில் 'உலக சாம்பியன்' குகேஷ்
ADDED : டிச 14, 2024 09:40 PM

சிங்கப்பூர்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷிற்கு, சிங்கப்பூரில் வாழும் இந்தியர் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
சிங்கப்பூரில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் இந்தியாவின் குகேஷ் 18, சீனாவின் டிங் லிரெனை 32, வீழ்த்தினார். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்தார் குகேஷ். இவருக்கு, சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் சிங்கப்பூருக்கான இந்திய துாதர் ஷில்பாக் அம்புலே, குகேஷிற்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
இதுகுறித்து ஷில்பாக் அம்புலே கூறுகையில், ''உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், அவரது வெற்றியால் பெருமை அடைந்துள்ளோம்,'' என்றார்.
குகேஷ் விருப்பம்உலக சாம்பியன் பட்டம் வென்றதால், நான் சிறந்த வீரர் ஆகி விட்டேன் என எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் போல வர வேண்டும், இவரைப் போல சாதிக்க என விரும்புகிறேன். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கார்ல்சனுக்கு எதிராக விளையாடினால், வியக்கத்தக்கதாக இருக்கும். செஸ் விளையாட்டில் இது மிகவும் சவாலான போட்டியாக அமையும். ஏனெனில் உலகின் சிறந்த வீரருக்கு எதிராக, எனது திறமையை சோதித்து பார்க்க ஆசையாக உள்ளது. ஆனால் இது கார்ல்சன் சம்பந்தப்பட்ட விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார்ல்சன் மறுப்பு
கடந்த 2013 முதல் 2023 வரை தொடர்ந்து 5 முறை உலக சாம்பியன் ஆன 'நம்பர்-1' வீரர் கார்ல்சன். இனிமேல் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க மாட்டேன் என அவராகவே விலகிக் கொண்டார்.
குகேஷ் விருப்பம் குறித்து கார்ல்சன் கூறியது: 'பிடே' தரவரிசையில் முதலில் பின் தங்கி இருந்த குகேஷ், சென்னை கிராண்ட்மாஸ்டர் தொடரில் சாதித்து, கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து அசத்திய இவர், தற்போது வியக்கத்தக்க சாதனை நிகழ்த்தியுள்ளார். அடுத்து 'நம்பர்-2' வீரர் ஆகலாம். விரைவில் உலகின் 'நம்பர்-1' இடம் பிடிக்கலாம். இவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. என்னைப் பொறுத்தவரையில், உலக சாம்பியன்ஷிப் என்ற வட்டத்திற்குள் மீண்டும் போட்டியிட நான் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.