ADDED : நவ 01, 2025 10:06 PM

கோவா: உலக கோப்பை செஸ் முதல் போட்டியில் இந்தியாவின் திவ்யா தோல்வியடைந்தார்.
இந்தியாவின் கோவாவில் செஸ் உலக கோப்பை 11வது சீசன் நேற்று துவங்குகிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ், கடந்த சீசனில் பைனலில் விளையாடிய பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, கார்த்திக் சிதம்பரம் உட்பட 23 வீரர்கள் பங்கேற்கின்றனர். இத்தொடரில் பங்கேற்கும் ஒரே இந்திய வீராங்கனையாக, பெண்கள் உலக கோப்பை தொடரில் சாம்பியன் ஆன திவ்யா உள்ளார்.
குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட, தரவரிசையில் 'டாப்-50' வீரர்கள், நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்பர். போட்டிகள் 'நாக் அவுட்' முறையில் நடக்கும். மொத்தம் 5 சுற்று முடிவில், காலிறுதி, அரையிறுதி, பின் நவ. 25ல் பைனல் துவங்கும். ஒவ்வொரு சுற்றிலும் இரு போட்டி நடக்கும்.
முதல் சுற்றுக்கான முதல் போட்டியில் இந்தியாவின் திவ்யா, கிரீஸ் வீரர் ஸ்டமாடிஸ் கோர்குலோஸ்-ஆர்டிடிஸ் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, 73வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சூர்யசேகர் கங்குலி, அஜர்பெய்ஜானின் அகமதுவை வீழ்த்தினார். இந்தியாவின் இனியன், கியூபாவின் டிலான் பெர்டேய்சை தோற்கடித்தார். மற்ற போட்டிகளின் இந்தியாவின் பிரனவ், பிரனேஷ் வெற்றி பெற்றனர். இந்தியாவின் கார்த்திக் வெங்கட்ராமன், கொலம்பியாவின் கார்சியா மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது.

