ADDED : நவ 01, 2025 10:33 PM

அரையிறுதியில் சின்னர்
பாரிஸ்: பிரான்சில் நடக்கும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தினார். மற்றொரு காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-6, 6-3, 7-6 என ரஷ்யாவின் மெத்வெடேவை தோற்கடித்தார்.
கென்ய வீரர் ஓய்வு
நியூயார்க் சிட்டி: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று சர்வதேச மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. இதில் கென்ய வீரர் எலியுட் கிப்சோஜ் 40, முதன்முறையாக பங்கேற்கிறார். உலக மாரத்தானில் 11, ஒலிம்பிக்கில் 2, உலக தடகளத்தில் ஒரு தங்கம் கைப்பற்றிய இவர், இப்போட்டியுடன் ஓய்வு பெற உள்ளார். கடைசியாக 2023ல் பெர்லினில் நடந்த உலக மாரத்தானில் தங்கம் வென்றிருந்தார்.
மான்செஸ்டர் கலக்கல்
லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்கள் சூப்பர் லீக் கால்பந்து தொடருக்கான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியை வீழ்த்தியது. செல்சி அணி 2-0 என, லண்டன் அணியை தோற்கடித்தது. புள்ளிப்பட்டியலில் செல்சி (19), மான்செஸ்டர் சிட்டி (18) முதலிரண்டு இடங்களில் உள்ளன.
எக்ஸ்டிராஸ்
* ஆஸ்திரேலியாவில் நடக்கும் நார்த் கோஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் இந்திய வீராங்கனை ராதிகா சீலன் 3-1 (11-13, 11-4, 14-12, 12-10) என ஹாங்காங்கின் போபோ லாமை வீழ்த்தினார்.
* கோவாவில் நடக்கும் சூப்பர் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இன்டர் காஷி அணியை வீழ்த்தியது.
* கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட புரோ லீக் தொடரை, வரும் ஜனவரி மாதம் நடத்திட இந்திய மல்யுத்த கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
* இந்தியா வரவுள்ள அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி, கோல்கட்டா (டிச. 12-13), கொச்சி (டிச. 13), மும்பை (டிச. 14), டில்லி (டிச. 15) நகரங்களுக்கு செல்ல இருந்தார். இதில் கேரள பயணம் ரத்தானதால், ஐதராபாத் (டிச. 13) செல்லவுள்ளார்.

