ADDED : நவ 29, 2024 09:44 PM

சிங்கப்பூர்: உலக செஸ் தொடரில் குகேஷ், டிங் லிரென் மோதிய 4வது சுற்று 'டிரா' ஆனது.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடக்கிறது. இதில் கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த உலகின் 'நம்பர்--5' இந்தியாவின் குகேஷ் 18, நடப்பு உலக சாம்பியன், உலகின் 'நம்பர்--15' சீனாவின் டிங் லிரென் 32, விளையாடுகின்றனர்.
மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். மொத்த பரிசுத் தொகை ரூ. 21 கோடி. முதல் சுற்றில் டிங் லிரென் வென்றார். இரண்டாவது சுற்று 'டிரா' ஆனது. மூன்றாவது சுற்றில் எழுச்சி கண்ட குகேஷ் வெற்றி பெற்றார்.
நான்காவது சுற்று நடந்தது. இதில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி 42வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. நான்கு சுற்றுகளின் முடிவில், குகேஷ் (2.0 புள்ளி), டிங் லிரென் (2.0) சமநிலையில் உள்ளனர். இன்று ஐந்தாவது சுற்று நடக்கிறது.