ADDED : ஆக 23, 2025 10:05 PM

ஷரபோவாவுக்கு கவுரவம்
லண்டன்: டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான சர்வதேச 'ஹால் ஆப் பேம்' பட்டியலில், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, அமெரிக்காவின் பாப், மைக் பிரையன் சகோதரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒற்றையரில் 5 கிராண்ட்ஸ்லாம் வென்ற ஷரபோவா, தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பிடித்த முதல் ரஷ்ய வீராங்கனையானார். இரட்டையரில் 16 கிராண்ட்ஸ்லாம் கைபற்றிய பிரையன் சகோதரர்கள், ரேங்கிங்கில் 438 வாரம் முதலிடத்தில் இருந்தனர்.
கனடா கலக்கல்
பாங்காக்: தாய்லாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் கனடா அணி 3-1 என்ற கணக்கில் பல்கேரியாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஜெர்மனி அணி 3-0 என, கென்யாவை தோற்கடித்தது. ஜப்பான் அணி 3-0 என, கேமரூனை வென்றது.
பைனலில் ஸ்பெயின்
பிடெஸ்டி: ருமேனியாவில் நடக்கும் பெண்களுக்கான (16 வயது) 'யூரோ' கூடைப்பந்து அரையிறுதியில் ஸ்பெயின் அணி 81-24 என்ற கணக்கில் லாட்வியாவை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனி அணி 41-57 என, சுலோவேனியாவிடம் தோல்வியடைந்தது.
அரையிறுதியில் இத்தாலி
ஒராடியா: ருமேனியாவில் நடக்கும் ஐரோப்பிய வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் (18 வயது) காலிறுதியில் இத்தாலி அணி 11-6 என, ஸ்பெயினை வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில் செர்பிய அணி 14-13 என ஹங்கேரியை தோற்கடித்தது. கிரீஸ் அணி 17-16 என குரோஷியாவை வென்றது.
எக்ஸ்டிராஸ்
* உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஜூனியர் பெண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்திய அணி 21-36 என, சீனாவிடம் தோல்வியடைந்தது.
* அமெரிக்காவில் நடக்கும் வின்ஸ்டன்--சலேம் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி 7-6, 2-6, 11-13 என பிரேசிலின் ரபெல் மடோஸ், மார்சிலோ மெலோ ஜோடியிடம் வீழ்ந்தது.
* ''அடுத்த ஆண்டு நடக்கவுள்ள காமன்வெல்த், ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்வதே இலக்கு,'' என, 400 மீ., ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்த தமிழக தடகள வீரர் விஷால் தெரிவித்தார்.