ADDED : செப் 04, 2025 10:23 PM

பிரேசில் கலக்கல்
பாங்காக்: தாய்லாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் காலிறுதியில் பிரேசில் அணி 3-0 (27-25, 33-31, 25-19) என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தியது. அரையிறுதியில் பிரேசில், இத்தாலி அணிகள் மோதுகின்றன.
ஜெர்மனி முதலிடம்
டாம்பியர்: பின்லாந்தில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து லீக் போட்டியில் ஜெர்மனி அணி 91-61 என, பின்லாந்தை வீழ்த்தியது. ஏற்கனவே மான்டினேக்ரோ, சுவீடன், லிதுவேனியா, பிரிட்டனை வீழ்த்திய ஜெர்மனி, 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
கத்தார்-பஹ்ரைன் 'டிரா'
தோகா: கத்தாரில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் கத்தார், பஹ்ரைன் அணிகள் மோதின. இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
ஆஸ்திரேலியா அசத்தல்
டார்வின்: ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஓசியானியா கோப்பை ஹாக்கி தொடருக்கான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில் நியூசிலாந்து அணி 1-0 என, ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.
எக்ஸ்டிராஸ்
* இந்திய கோல்ப் பிரிமியர் லீக் தொடர் (செப். 10-டிச. 25), பிரிமியர் லீக் கிரிக்கெட் போல பிரபலமடையும்,'' என, முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' யுவராஜ் சிங் தெரிவித்தார்.
* இந்தியா, சிங்கப்பூர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தகுதிச் சுற்று போட்டி வரும் அக். 14ல் கோவாவில் நடக்கும் என, அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது.
* இந்திய மாற்றுத்திறனாளி ('பாரா') பாட்மின்டன் வீரர் சுகந்த் கடம், 'எஸ்.எல்.4' பிரிவு உலக தரவரிசையில் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் தங்கம் வென்றிருந்தார்.