ADDED : அக் 06, 2025 10:55 PM

பிரான்ஸ் கோல் மழை
டால்கா: சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லீக் போட்டியில் பிரான்ஸ் அணி 6-0 என்ற கோல் கணக்கில் நியூ கலிடோனியாவை வீழ்த்தியது. மூன்று போட்டியில், 2ல் வென்ற பிரான்ஸ், 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.
சின்னர் விலகல்
ஷாங்காய்: சீனாவில் நடக்கும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இத்தாலியின் ஜானிக் சின்னர், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் மோதினர். சின்னர் 7-6, 5-7, 2-3 என பின்தங்கி இருந்த போது காலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் விலகினார்.
பார்சிலோனா ஏமாற்றம்
மாட்ரிட்: ஸ்பெயினில் நடக்கும் 'லா லிகா' கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் பார்சிலோனா, செவில்லா அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய பார்சிலோனா 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. ரியல் மாட்ரிட் அணி 3-1 என, வில்லாரியல் அணியை வென்றது.
எக்ஸ்டிராஸ்
* ஆமதாபாத்தில், டிச. 9ல் துவங்கவுள்ள டென்னிஸ் பிரிமியர் லீக் 7வது சீசனில் இந்தியாவின் ரோகன் போபண்ணா பங்கேற்கிறார். இவர், கடந்த ஆண்டு பெங்களூரு அணியில் அறிமுகமானார்.
* ஆமதாபாத்தில் நடக்கும் ஆசிய அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப், வாட்டர் போலோ போட்டியில் இந்திய ஆண்கள் அணி 6-20 என, கஜகஸ்தானிடம் தோல்வியடைந்தது.
* லங்கா பிரிமியர் லீக் 6வது சீசனில் (டிச. 1-23), முதன்முறையாக இந்திய வீரர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 20 லீக், 4 'நாக்-அவுட்' என, 24 போட்டிகள் நடக்கவுள்ளன.
* கிர்கிஸ்தானில் நடக்கவுள்ள 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து (2026) தகுதிச் சுற்றில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அனுஷ்கா குமாரி, திவ்யானி லிண்டா, அலிஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
* பின்லாந்தில் நடக்கவுள்ள ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன் தொடரில் (அக். 7-12) இந்தியா சார்பில் லக்சயா சென், ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி, கிரண் ஜார்ஜ், தன்யா ஹேம்நாத், அன்மோல் கார்ப் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.