ADDED : அக் 17, 2025 10:17 PM

பாவோலினி முன்னேற்றம்
நிங்போ: சீனாவில், டபிள்யு.டி.ஏ., நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி மோதினர். பாவோலினி 5-7, 7-5, 6-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பைனலில் தென் ஆப்ரிக்கா
இஸ்மாயிலியா: எகிப்தில் நடக்கும் பெண்களுக்கான ஆப்ரிக்க கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 5-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது. 10 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்க அணி பைனலுக்குள் நுழைந்தது.
ரியல் மாட்ரிட் அபாரம்
பாரிஸ்: பிரான்சில் நடந்த பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியை வீழ்த்தியது. மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என, அத்லெடிகோ மாட்ரிட் அணியை வென்றது.
நவோமி ஒசாகா விலகல்
ஒசாகா: ஜப்பான் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (இடது காலில் காயம்) விலகினார். இதனையடுத்து ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
எக்ஸ்டிராஸ்
* இந்திய தொடருக்கான (2 நான்கு நாள் போட்டி, அக். 30 - நவ. 9, இடம்: பெங்களூரு) தென் ஆப்ரிக்கா 'ஏ' அணியில், டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா சேர்க்கப்பட்டுள்ளார்.
* சீனாவில், உலக கோப்பை வில்வித்தை பைனல் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் ஜோதி சுரேகா, மதுரா, ரிஷாப் யாதவ் பங்கேற்கின்றனர்.
* தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் (அக். 24-26, ராஞ்சி) தொடருக்கான 92 பேர் கொண்ட இந்திய அணியில் தீபிகா (ஈட்டி எறிதல்), பூவம்மா, பிரியா மோகன் (4x400 மீ., தொடர் ஓட்டம்), ரோகித், ஆதர்ஷ் ராம் (உயரம் தாண்டுதல்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
* 'விசா' கிடைப்பதில் இழுபறி நீடிப்பதால், ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடரில் (அக். 21-26, லண்டன்) இந்தியாவின் மணிகா பத்ரா, ஹர்மீத்தேசாய், சத்யன், தியா, பங்கேற்பது சந்தேகம்.
* இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் சங்க (ஐ.சி.ஏ.,) தலைவராக, முன்னாள் இந்திய பெண்கள் அணி கேப்டன் சாந்தா ரங்கசாமி தேர்வானார். செயலராக வெங்கட் சுந்தரம், பொருளாளராக தீபக் ஜெயின் தேர்வாகினர்.