ADDED : நவ 07, 2025 10:36 PM

அரையிறுதியில் ஜோகோவிச்
ஏதென்ஸ்: கிரீசில் நடக்கும் ஹெலனிக் சாம்பியன்ஷிப் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போர்ச்சுகலின் நுனோ போர்ஜஸ் மோதினர். இதில் ஜோகோவிச் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இத்தாலி தகுதி
அல் ரய்யான்: கத்தாரில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து 20வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இத்தாலி அணி 4-0 என பொலிவியாவை வீழ்த்தியது. முதல் போட்டியில் கத்தாரை வீழ்த்திய இத்தாலி (6 புள்ளி) 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஜப்பான் கலக்கல்
ஒஸ்கெமென்: கஜகஸ்தானில் நடக்கும் பெண்களுக்கான ஆசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த ஜப்பான் அணி 7-0 என தென் கொரியாவை வீழ்த்தியது. முதல் போட்டியில் கஜகஸ்தானை வீழ்த்திய ஜப்பான், தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.
தாய்லாந்து வெற்றி
அம்மான்: ஜோர்டானில் நடக்கும் பெண்கள் (16 வயது) ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப், 5-8வது இடத்துக்கான அரையிறுதியில் தாய்லாந்து அணி 3-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பிலிப்பைன்ஸ் அணி 3-0 என ஹாங்காங்கை வென்றது.
எக்ஸ்டிராஸ்
* விசாகப்பட்டனத்தில் இன்று துவங்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஆந்திரா அணிகள் மோதுகின்றன. தமிழக அணி, இதுவரை விளையாடிய 3 போட்டியில், 2 'டிரா', ஒரு தோல்வியை பெற்றது.
* ஹாக்கி இந்தியா லீக் தொடருக்கான சூர்மா கிளப் அணியின் தலைமை பயிற்சியாளராக பெல்ஜியத்தின் பிலிப் கோல்டுபெர்க் 46, நியமிக்கப்பட்டார். இவர், பீஜிங் ஒலிம்பிக்கில் (2008) விளையாடினார்.
* ஜெர்மனியில் நடக்கும் டபிள்யு.டி.டி., சாம்பியன்ஸ் டேபிள் டென்னிஸ் தொடரில் இருந்து இந்திய வீரர் மானவ் தாக்கர், உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பாதியில் விலகினார். முதன்முறையாக இத்தொடரில் பங்கேற்ற இவர், முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
* கோவாவில் நடக்கும் சூப்பர் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் மும்பை சிட்டி அணி 1-0 என, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது. மூன்று போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வி என, 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

