ADDED : நவ 10, 2025 10:49 PM

பிரிட்டன் வீரர் 'சாம்பியன்'
சாவ் பாலோ: பிரேசிலில் நடந்த 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயத்தில், இலக்கை 53 நிமிடம், 25.928 வினாடியில் கடந்த 'மெக்லாரன்-மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லாண்டோ நோரிஸ் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு ஆண்டில் 7வது கோப்பை இவர், சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் (390 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார்.
அர்ஜென்டினா 'ஹாட்ரிக்'
அல் ரய்யான்: கத்தாரில் நடக்கும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 7-0 என்ற கோல் கணக்கில் பிஜி அணியை வென்றது. ஏற்கனவே பெல்ஜியம், துனிசியாவை வீழ்த்திய அர்ஜென்டினா, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.
ஸ்வெரேவ் வெற்றி
டுரின்: இத்தாலியில் நடக்கும் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் மோதினர். இதில் ஸ்வெரேவ் 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பார்சிலோனா கலக்கல்
மாட்ரிட்: ஸ்பெயினில் நடக்கும் 'லா லிகா' கோப்பை கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் செல்டா விகோ அணியை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 12 போட்டியில், 9 வெற்றி, ஒரு 'டிரா', 2 தோல்வியை பெற்ற பார்சிலோனா (28 புள்ளி) 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் ரியல் மாட்ரிட் (31) உள்ளது.
எக்ஸ்டிராஸ்
* அமெரிக்காவில் நடந்த செயின்ட் ஜேம்ஸ் எக்ஸ்பிரஸ்சன் ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதியில் இந்திய வீரர் வீர் சோட்ரானி 1-3 (11-13, 11-4, 4-11, 3-11) என மெக்சிகோவின் லியோனல் கார்டினாசிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
* டில்லியில் நடந்த காது கேளாதவர்களுக்கான 9வது தேசிய 'டி-20' சாம்பியன்ஷிப் பைனலில், மகாராஷ்டிரா அணி 8 ரன் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீர் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது.
* சிலியில், பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் (நவ. 25 - டிச. 13) நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ஜோதி சிங் நியமிக்கப்பட்டார்.
* நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 4வது 'டி-20' போட்டி (இடம்: நெல்சன்) மழையால் பாதியில் ரத்தானது. நியூசிலாந்து அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

