ADDED : நவ 12, 2025 10:37 PM

அல்காரஸ் அசத்தல்
டுரின்: இத்தாலியில், உலகின் 'டாப்-8' வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. 'ஜிம்மி கானர்ஸ்' பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6-7, 7-6, 6-3 என அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை வீழ்த்தினார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்திய கார்லஸ், இன்னும் ஒரு வெற்றி பெற்றால், ஆண்டு இறுதியில் வெளியாகும் தரவரிசையில் முதலிடத்தை தட்டிச் செல்லலாம்.
ரியல் மாட்ரிட் 'டிரா'
மாட்ரிட்: ஸ்பெயினில் நடந்த பெண்களுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட், பாரிஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 1-1 என 'டிரா' ஆனது. ஆஸ்திரியாவில் நடந்த போட்டியில் செல்சி அணி 6-0 என்ற கோல் கணக்கில், செயின்ட் போல்டென் அணியை (ஆஸ்திரியா) வென்றது.
ஆஸ்திரியா 'ஹாட்ரிக்'
அல் ரய்யான்: கத்தாரில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து 20வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் ஆஸ்திரிய அணி 4-1 என நியூசிலாந்தை வீழ்த்தியது. ஏற்கனவே சவுதி அரேபியா, மாலியை வீழ்த்திய ஆஸ்திரியா, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.
எக்ஸ்டிராஸ்
* எகிப்தில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆஷி (588 புள்ளி), அஞ்சும் (587), சிப்ட் கவுர் சாம்ரா (580) முறையே 15, 17, 48வது இடம் பிடித்து ஏமாற்றினர்.
* உலக கோப்பை (50 ஓவர்) வென்ற அணியில் இடம் பெற்ற இந்திய வீராங்கனை ஷைபாலி வர்மாவுக்கு, ஹரியானா மாநில அரசு சார்பில் ரூ. 1.50 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
* கடந்த அக்டோபர் மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதை தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா வால்வார்ட் தட்டிச் சென்றார். சமீபத்திய உலக கோப்பையில் 8 போட்டியில், 470 ரன் (சராசரி 67.14, 'ஸ்டிரைக் ரேட்' 97.91) குவித்தார். இவ்விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
* முன்னாள் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விஜய் ஹசாரே டிராபியில் (டிச. 25 - 2026, ஜன. 18) பங்கேற்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை என, மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.

