ADDED : நவ 23, 2025 11:20 PM

நெதர்லாந்து வீரர் முதலிடம்
லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் நடந்த லாஸ் வேகாஸ் 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயத்தில், 'ரெட் புல் ரேசிங்-ஹோண்டா' அணியின் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (ஒரு மணி நேரம், 21 நிமிடம், 08.429 வினாடி) முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
அரையிறுதியில் பிரேசில்
அல் ரய்யான்: கத்தாரில் நடக்கும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து காலிறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியை வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில் போர்ச்சுகல் அணி 2-0 என சுவிட்சர்லாந்தை வென்றது. அரையிறுதியில் பிரேசிகல், போர்ச்சுகல் மோதுகின்றன.
சுவீடன் ஜோடி அசத்தல்
அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில், பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பைனலில் சுவீடனின் டேவிட் அஹ்மன், ஜோனாதன் ஹெல்விக் ஜோடி 2-0 (25-23, 21-19) என்ற கணக்கில் சகநாட்டை சேர்ந்த ஜேக்கப் நில்சன், எல்மர் ஆண்டர்சன் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
போர்ச்சுகல் கலக்கல்
பாசிக்: பிலிப்பைன்சில், பெண்களுக்கான உலக கோப்பை 'புட்சல்' கால்பந்து முதல் சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி 10-0 என, தான்சானியாவை தோற்கடித்தது. ஜப்பான் அணி 6-0 என, நியூசிலாந்தை வென்றது. ஸ்பெயின் அணி 5-2 என, தாய்லாந்தை வீழ்த்தியது.
எக்ஸ்டிராஸ்
* தாய்லாந்தில் நடந்த ஆசிய ஓசியானியா 100 கி.மீ., அல்ட்ரா சாம்பியன்ஷிப் ஓட்டத்தில் இந்தியாவின் அமர் சிங் தேவந்தா (6 மணி நேரம், 59 நிமிடம், 37 வினாடி) தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார்.
* இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா - பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் திருமணம் நவ. 23ல் நடக்க இருந்தது. மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், இத்திருமணம் ஒத்திவைப்பு.
* பெங்களூருவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான (19 வயது) லீக் போட்டியில் முகமது எனான் (105*) கைகொடுக்க இந்தியா 'ஏ' அணி (269/7, 50 ஓவர்) 26 ரன் வித்தியாசத்தில் இந்தியா 'பி' அணியை (243/10, 47.2 ஓவர்) வீழ்த்தியது.
* ஆமதாபாத்தில் நடந்த ஆசிய கோப்பை (17 வயது) கால்பந்து (2026) தகுதிச் சுற்று போட்டியில் இந்தியா, பாலஸ்தீனம் அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என 'டிரா' ஆனது. இந்தியா சார்பில் சுபம் பூனியா ஒரு கோல் அடித்தார்.
* லக்னோவில், சையது மோடி இந்தியா சர்வதேச பாட்மின்டன் தொடர் நாளை துவங்குகிறது. இந்தியா சார்பில் ஸ்ரீகாந்த், பிரனாய், திரிசா, காயத்ரி கோபிசந்த், தன்வி சர்மா, அன்மோல் கார்ப், உன்னதி ஹூடா, பிரியான்ஷு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

