ADDED : நவ 27, 2025 11:00 PM

எம்பாப்வே 'ஹாட்ரிக்'
ஏதென்ஸ்: கிரீசில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), ஒலிம்பியாகோஸ் (கிரீஸ்) அணிகள் மோதின. பிரான்ஸ் வீரர் எம்பாப்வே 'ஹாட்ரிக்' உட்பட 4 கோல் அடித்து கைகொடுக்க, ரியல் மாட்ரிட் அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஜெர்மனி ஜெயம்
ஸ்டட்கர்ட்: ஜெர்மனி, நெதர்லாந்தில், பெண்களுக்கான உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 27வது சீசன் நடக்கிறது. ஸ்டட்கர்ட் நகரில் நடந்த லீக் போட்டியில் ஜெர்மனி அணி 32-25 என, ஐஸ்லாந்தை வீழ்த்தியது. செர்பிய அணி 31-19 என்ற கணக்கில் உருகுவேயை தோற்கடித்தது.
பிரேசில் முன்னேற்றம்
பாசிக்: பிலிப்பைன்சில், பெண்களுக்கான 'புட்சால்' உலக கோப்பை கால்பந்து முதல் சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் பிரேசில் அணி 6-1 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. ஏற்கனவே ஈரானை வென்ற பிரேசில் அணி, 6 புள்ளிகளுடன் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.
எக்ஸ்டிராஸ்
* பெங்களூருவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான (19 வயது) லீக் போட்டியில் இந்தியா 'ஏ' அணி (168/10, 30.2 ஓவர்) 65 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் (233/8, 50 ஓவர்) தோல்வியடைந்தது.
* சீனாவின் செங்டுவில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன், 'ஆசியா-பசிபிக் வைல்டு கார்டு பிளே-ஆப்' தொடருக்கான ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல் 2-6, 2-6 என சீனாவின் யுன்சாவோகேடையிடம் தோல்வியடைந்தார்.
* ஆஸ்திரேலியாவில் நடக்கும் பெண்கள் 'பிக் பாஷ் லீக்' தொடருக்கான பிரிஸ்பேன் ஹீட் அணியில் இருந்து இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் விடுவிக்கப்பட்டார். தந்தையின் உடல்நிலை பாதிப்பால் தனது திருமணத்தை ஒத்திவைத்த சக வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆதரவு அளிக்க ஜெமிமா இத்தொடரில் இருந்து பாதியில் விலகினார்.
* ராஜஸ்தானில் நடக்கும் 'கேலோ இந்தியா' பல்கலை., விளையாட்டில், ஜெயின் பல்கலை., நீச்சல் வீராங்கனை பவ்யா சச்தேவா, 7வது தங்கம் வென்றார்.

