ADDED : ஜூலை 29, 2025 11:06 PM

புதுடில்லி: ஜார்ஜியாவில் பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடந்தது. பைனலில் ஹம்பி, திவ்யா என இரண்டு இந்திய வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் அசத்திய 19 வயது திவ்யா, செஸ் உலக கோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார். தவிர இருவரும் 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
இதுகுறித்து 1996, 1999ல் உலக செஸ் சாம்பியன் ஆன ஹங்கேரி-அமெரிக்க கிராண்ட்மாஸ்டர், சூசன் போல்கர் 56, கூறியது:
உலக கோப்பை தொடர் துவங்கும் முன் திவ்யா வலிமையான வீராங்கனை, இவர் வெற்றி பெறுவார் என யாரும் கணிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம், மன உறுதி திவ்யாவிடம் இருந்தது. இது மற்றவர்களிடம் இல்லை.
பல்வேறு போட்டிகளில் திவ்யா, பின்தங்கினார். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த தவறினார். ஆனால் இதுகுறித்து எதுவும் கவலைப்படவில்லை. பயமின்றி, துணிச்சலாக வெற்றிக்காக போராடினார். கடைசியில் கோப்பை வென்று சாதித்த திவ்யாவுக்கு வாழ்த்துகள்.
உண்மையில் இந்திய செஸ் நட்சத்திரங்கள் உலக அரங்கில் வெற்றி பவனி வருகின்றனர். ஆனந்த் போன்ற ஜாம்பவான்கள், புதிய தலைமுறை நட்சத்திரங்களை வழிநடத்திச் செல்வதால், இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. 12 வயதில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் ஆன போது, பெரிய வீரர் இல்லை.
இவர் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்துவார் என கணித்தேன். பலர் இதனை விமர்சித்தனர். ஆனால் உடனடியாக அவரை 50க்கும் மேற்பட்ட கிராண்ட்மாஸ்டர்களுக்கு பயிற்சி அளித்த அனுபவத்தை கொண்டு, குகேஷிடம் வியத்தகு திறமை இருப்பதை அறிந்தேன். இதுபோன்று தான் திவ்யா. இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக இல்லை என்றாலும், அபூர்வ திறமை உள்ளது.
கடின பயிற்சி
குகேஷ், திவ்யா என இளம் நட்சத்திரங்கள் பயமறியாதவர்கள். வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி கொண்டவர்கள். இது தான் அவர்களை குறைபாடுகளை சரி செய்கிறது. பயிற்சி, அனுபவம் சேரும் போது, வலிமையான வீரர், வீராங்கனையாக மாறி விடுவர்.
திவ்யாவை பொறுத்தவரை வளர்ந்து வரும் வீராங்கனை தான் என்றாலும், இப்போது உலக கோப்பை வென்றுள்ளார். மற்றவர்கள் பார்வை முழுவதும் அவர் மீது இருக்கும். இவரை வீழ்த்த முயற்சிக்கலாம். இதனால் தொடர்ந்து கடினமான பயிற்சியில் ஈடுபட வேண்டும். பலவீனங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொற்காலம்
சூசன் போல்கர் கூறுகையில்,'' இந்திய செஸ் அரங்கில் இது பொற்காலம். இளம் நட்சத்திரங்கள் ஒருவருக்கு ஒருவர் மரியாதை, ஆதரவு தெரிவிக்கின்றனர். அரசு, ஸ்பான்சர் தொடர்ச்சியான ஆதரவு காரணமாக, நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்துவர்,'' என்றார்.
24 தங்கம்
இந்தியாவுக்காக 41 முறை போட்டிகளில் பங்கேற்ற திவ்யா, 24 தங்கம் வென்றுள்ளார். தவிர 7 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கம் கைப்பற்றினார்.
* 2024ல் உலக ஜூனியர் சாம்பியன் ஆன திவ்யா, யூத் வேர்ல்டு செஸ் தொடரில் 2 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கம் வென்றார். தவிர, 2022, 2023ல் தேசிய சாம்பியன் ஆனார்.
'நம்பர்-15'
உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, செஸ் தரவரிசையில் 3 இடம் முன்னேறி, 15வது இடம் பிடித்தார். ஒரு இடம் பின்தங்கிய ஹம்பி, 6வது இடம் பிடித்தார். ஹரிகா, 12வது இடத்தில் தொடர்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை வைஷாலி, 15ல் இருந்து 18 வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 'டாப்-5' பட்டியலில் சீன வீராங்கனைகள் இபான், வென்ஜுன் (உலக சாம்பியன்), டிங்ஜி, ஜோங்யி, ஜு ஜினெர் உள்ளனர்.

