/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆஷஸ்: ஹேசல்வுட் விலகல் * உலக விளையாட்டு செய்திகள்
/
ஆஷஸ்: ஹேசல்வுட் விலகல் * உலக விளையாட்டு செய்திகள்
ADDED : நவ 15, 2025 11:10 PM

பெர்த்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ், டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. ஐந்து போட்டி கொண்ட இத்தொடரின் முதல் டெஸ்ட், வரும் 21ல் பெர்த்தில் துவங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட், தொடை பின்பகுதி காயம் காரணமாக விலகினார். ஏற்கனவே 'ரெகுலர்' கேப்டன் கம்மின்ஸ் இல்லாத நிலையில், ஹேசல்வுட்டும் வெளியேறியது, பின்னடைவாக அமைந்துள்ளது.
கால்பந்து: அர்ஜென்டினா வெற்றி
லுவாண்டா: போர்ச்சுகலில் இருந்து ஆப்ரிக்க நாடான அங்கோலா, 1975ல் சுதந்திரம் அடைந்தது. இதன் 50 ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், அங்கோலா கால்பந்து அணி, உலக சாம்பியன் அர்ஜென்டினா மோதிய நட்பு போட்டி லுவாண்டா நகரில் நடந்தது. இதற்காக ரூ. 106 கோடி அர்ஜென்டினாவுக்கு வழங்கப்பட்டது. இதில் மார்டினஸ் (44வது நிமிடம்) கோல் அடிக்க கேப்டன் மெஸ்ஸி கைகொடுத்தார். 82வது நிமிடம் மார்டினஸ் கொடுத்த பந்தை மெஸ்ஸி, கோலாக (196 போட்டி, 115 கோல்) மாற்றினார். முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என வெற்றி பெற்றது.
டென்னிஸ்: ஜிவரேவ் தோல்வி
டுரின்: இத்தாலியில், உலகின் 'டாப்-8' வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. 'பிஜோர்ன் போர்க்' பிரிவில் நடந்த கடைசி லீக் போட்டியில் ஜெர்மனியின் ஜிவரேவ், கனடாவின் ஆகர் அலியாசிமே மோதினர். இதில் ஜிவரேவ் 4-6, 6-7 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். பட்டியலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட, அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
வருகிறது 'எமர்ஜிங் டிராபி'
பாங்காக்: இந்தியாவில் நடந்த பெண்களுக்கான உலக கோப்பை பெரும் வரவேற்பு பெற்றது. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில், பெண்கள் கிரிக்கெட்டை வளர்க்கும் வகையில் எட்டு அணிகள் பங்கேற்கும், 'எமர்ஜிங் நேஷன்ஸ் டிராபி' தொடர், தாய்லாந்தின் பாங்காக்கில் வரும் நவம்பர் 20-30ல் நடக்க உள்ளது. இதில் தாய்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, உகாண்டா, நமீபியா, தான்ஜானியா, பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன.
* சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் ('பிடே') உலக அமெச்சூர் சாம்பியன்ஷிப், செர்பியாவில் நடந்தது. உலகத் தரவரிசையில் 1700 புள்ளிக்கு கீழ் உள்ளவர்களுக்கான பிரிவில் இந்தியாவின் அன்ஷு பதக், வெள்ளி வென்றார். பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் திஷா, வெண்கலம் கைப்பற்றினார்.
* எகிப்தின் கெய்ரோவில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 25 மீ., ஸ்டாண்டர்டு பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங், 9வது இடம் பெற்று பைனல் வாய்ப்பை இழந்தார். இதுவரை இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கத்துடன், பட்டியலில் இரண்டாவதாக உள்ளது. சீனா (12+7+2) முதலிடத்தில் உள்ளது.
* பெண்களுக்கான உலக கோப்பை தொடரில் 434 ரன் குவித்த இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு, மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டது.
* தாய்லாந்து சென்ற இந்திய கால்பந்து அணி (23 வயதுக்கு உட்பட்ட) நட்பு போட்டியில் பங்கேற்றது. இதில் இந்திய அணி 0-4 என்ற கோல் கணக்கில் தாய்லாந்திடம் தோல்வியடைந்தது.
* ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றில் வரும் 18ல் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. தாகாவில் நடக்கும் இப்போட்டிக்கான இந்திய அணியில் ஆஸ்திரேலியாவில் பிறந்து, சமீபத்தில் இந்திய 'பாஸ்போர்ட்' பெற்ற ரியான் வில்லியம்ஸ் சேர்க்கப்பட்டார்.

