ADDED : டிச 30, 2025 10:46 PM

லாகோஸ்: பிரிட்டனை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் அந்தோணி ஜோஷுவா, 36. முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான இவர், நைஜீரியா சென்றிருந்தார். இங்குள்ள லாகோஸ்-இபாடன் எக்ஸ்பிரஸ் சாலையில், இவரது லெக்சஸ் கார், நின்று கொண்டிருந்த 'டிரக்' மீது மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் இவரது இரு நண்பர்கள் பலியாகினர். பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜோஷுவா லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏலத்தில் பிராட்மேன் தொப்பி
சிட்னி: மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன், 1947/48ல் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அப்போது தனது பச்சை நிற தொப்பியை இந்திய 'ஆல்-ரவுண்டர்' ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹானிக்கு பரிசாக வழங்கினார். இத்தொப்பி அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது. இது பற்றி லாய்ட்ஸ் ஏல நிறுவனத்தின் லீ ஹேம்ஸ் கூறுகையில்,''75 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீரங்கா குடும்பத்தின் சொத்தாக பிராட்மேனின் தொப்பி உள்ளது. அரிய பொக்கிஷமாக கருதப்படுகிறது,''என்றார். இதே தொடரில் பிராட்மேன் பயன்படுத்திய ஒரு தொப்பி, கடந்த ஆண்டு ரூ.2.63 கோடிக்கு ஏலம் போனது. இதைவிட அதிக தொகை இம்முறை கிடைக்கலாம்.
குயின்டன் டி காக் விளாசல்
கபர்ஹா: தென் ஆப்ரிக்காவில் நடக்கும் எஸ்.ஏ., 20 லீக் போட்டியில், குயின்டன் டி காக் விளாசல் (47 பந்தில் 77 ரன்) கைகொடுக்க, ஈஸ்டர்ன் கேப் அணி (20 ஓவரில், 188/6), பிரிட்டோரிய கேப்பிட்டல்ஸ் அணியை (18 ஓவரில் 140) 48 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
எக்ஸ்டிராஸ்
* விஜய் ஹசாரே டிராபி தொடரில் இன்று ஆமதாபாத்தில் நடக்கும் லீக் போட்டியில் தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் மோதுகின்றன.
* நெதர்லாந்தில் குரோனிங்கென் செஸ் தொடர் நடந்தது. 9 சுற்று முடிவில் 6 புள்ளி பெற்ற இந்தியாவின் பிரனீத், அதிகபட்சம் 5வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் எலியாஸ் (7.0) சாம்பியன் ஆனார்.
* குஜராத்தின் சூரத்தில் ஜூனியர் ஆண்கள் அகாடமி ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் பஞ்சாப் அணி 4-0 என எஸ்.ஜி.பி.ஜி அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
* இந்தியாவில், பெண்கள் பிரிமியர் லீக் 'டி-20', 4வது சீசன் அடுத்த ஆண்டு (ஜன. 9 - பிப். 5) நடக்கவுள்ளது. இதற்கான, நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியின் ஆல் ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி (ஆஸி.,), டில்லி அணியின் அன்னாபெல் (ஆஸி.,) என இருவரும், தனிப்பட்ட காரணங்களுக்காக, தொடரில் இருந்து விலகினர்.
* பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடரில் ராஞ்சி ராயல்ஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெங்கால் டைகர்ஸ் அணியை வீழ்த்தியது.

