ADDED : அக் 30, 2026 04:41 AM

அஸ்தானா: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பைனலுக்கு இந்தியாவின் மணிஷா முன்னேறினார்.
கஜகஸ்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான பிரீஸ்டைல் 59 கிலோ பிரிவு போட்டிகள் நடந்தன. இந்தியா சார்பில் மணிஷா பங்கேற்றார். காலிறுதியில் 6–0 என மங்கோலியாவின் போலார்டுயாவை வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில் மணிஷா, கஜகஸ்தானின் ஆல்டின் ஷகயேவாவை எதிர்கொண்டார்.
துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மணிஷா, 10–0 என வென்று, பைனலுக்குள் நுழைந்தார். இதில் அமெரிக்காவின் அபிகெய்ல் எலிசபெத்தை சந்திக்கிறார்.
பெண்களுக்கான 72 கிலோ பிரிவில் 20 வயது பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் தானு சர்மா, அமெரிக்காவின் ரோசன்னா பெல் மோதினர். இதில் 9–5 என வெற்றி பெற்ற தானு, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 65 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சுஜீத் கல்கல், தஜிகிஸ்தானின் அப்துல் மஜித் மோதினர். சமீபத்திய ஆசிய விளையாட்டு பைனலில் அப்துலை வீழ்த்தி தங்கம் வென்ற சுஜீத், இம்முறை (3–3) அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
