/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
மேடிசன் கீஸ் சாம்பியன் * ஆஸி., ஓபன் டென்னிசில்...
/
மேடிசன் கீஸ் சாம்பியன் * ஆஸி., ஓபன் டென்னிசில்...
ADDED : ஜன 25, 2025 05:41 PM

மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதல் பட்டம் வென்றார் அமெரிக்காவின் மேடிசன் கீஸ். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பைனலில் சபலென்காவை வீழ்த்தி கோப்பை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பைனல் நடந்தது. உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, 'நடப்பு சாம்பியன்' பெலாரசின் சபலென்கா, ஆஸ்திரேலிய ஓபனில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறிய அமெரிக்காவின் மேடிசன் கீசை 29, ('நம்பர்-14') எதிர்கொண்டார்.
இதில் வென்றால் இத்தொடரில் 'ஹாட்ரிக்' கோப்பை வெல்லலாம் என காத்திருந்த சபலென்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் செட்டை 6-3 என மடிசன் கீஸ் கைப்பற்றினார். அடுத்து நடந்த இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற சபலென்கா, 6-2 என வசப்படுத்தி பதிலடி கொடுத்தார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது, கடைசி செட் இழுபறியானது. இருவரும் மாறி மாறி கேம்களை வசப்படுத்தினர். ஒரு கட்டத்தில் 5-5 என சமனில் இருந்தது. இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட மேடிசன் கீஸ், அடுத்தடுத்து இரு கேம்களை கைப்பற்றினார். முடிவில் 7-5 என செட்டை வென்றார்.
2 மணி நேரம், 4 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ், 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது, ஆஸ்திரேலிய ஓபன், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் மேடிசன் கீஸ் வென்ற முதல் பட்டம் ஆனது.

