/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
பைனலில் சின்னர்-அல்காரஸ்: யு.எஸ்., ஓபனில் மோதல்
/
பைனலில் சின்னர்-அல்காரஸ்: யு.எஸ்., ஓபனில் மோதல்
ADDED : செப் 06, 2025 09:26 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலில் இத்தாலியின் சின்னர், ஸ்பெயினின் அல்காரஸ் மோதுகின்றனர்.
நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் 'நம்பர்-2' வீரரான ஸ்பெயினின் அல்காரஸ், செர்பியாவின் ஜோகோவிச் (7வது) மோதினர். இரண்டு மணி நேரம், 23 நிமிடம் நீடித்த போட்டியில் ஜோகோவிச் 4-6, 6-7, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். அல்காரஸ் பைனலுக்கு முன்னேறினார்.
சின்னர் அபாரம்: மற்றொரு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் அகுர்-அலியாசிம் (27வது) மோதினர். மூன்று மணி நேரம், 21 நிமிடம் நீடித்த போட்டியில் 'நடப்பு சாம்பியன்' சின்னர் 6-1, 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார். இவர், நடப்பு ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் பைனலுக்கு முன்னேறினார்.
ஜோகோவிச் உறுதி
ஜோகோவிச் இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். கடைசியாக 2023ல் யு.எஸ்., ஓபனில் கோப்பை கைப்பற்றினார். அதன்பின் கோப்பை வெல்லவில்லை. இவர் கூறுகையில், ''25வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைக்க தொடர்ந்து போராடுவேன்,'' என்றார்.
மூன்றாவது முறை
பைனலில் சின்னர், அல்காரஸ் மோதுகின்றனர். இந்த ஆண்டு தொடர்ச்சியாக 3வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலில் விளையாடுகின்றனர். கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் ஒற்றையர் பிரிவு வரலாற்றில் இப்படி மோதுவது முதன்முறை. கடைசியாக, இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் மோதினர். இதில் தலா ஒரு முறை கோப்பை வென்றனர்.
கிராண்ட்ஸ்லாம் அரங்கில் மோதிய 5 போட்டியில், அல்காரஸ் 3, சின்னர் 2ல் வெற்றி பெற்றனர். யு.எஸ்., ஓபனில் 2வது முறையாக மோதுகின்றனர். 2022ல் நடந்த காலிறுதியில் அல்காரஸ் வெற்றி பெற்றிருந்தார்.