/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
அரையிறுதியில் கோகோ காப்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
/
அரையிறுதியில் கோகோ காப்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
அரையிறுதியில் கோகோ காப்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
அரையிறுதியில் கோகோ காப்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
UPDATED : ஜூன் 04, 2024 09:07 PM
ADDED : ஜூன் 04, 2024 08:57 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு அமெரிக்காவின் கோகோ காப் முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஆன்ஸ் ஜபீர் மோதினர். முதல் செட்டை 4-6 என இழந்த கோகோ காப், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இவர் 6-3 என வென்றார். முடிவில் கோகோ காப் 4-6, 6-2, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் உலகின் 'நம்பர்-1' போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷ்யாவின் மார்கெடா வான்ட்ரூசோவா மோதினர். இதில் 'நடப்பு சாம்பியன்' ஸ்வியாடெக் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஜோகோவிச் விலகல்
ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செரன்டோலோ மோதினர். நான்கு மணி நேரம், 39 நிமிடம் நீடித்த போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஜோகோவிச் 6-1, 5-7, 3-6, 7-5, 6-3 என போராடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் அதிக போட்டிகளில் வெற்றி (370) பெற்ற வீரர்கள் வரிசையில் சுவிட்சர்லாந்தின் பெடரரை (369 வெற்றி) முந்தி முதலிடம் பிடித்தார்.
இப்போட்டியின் 2வது செட்டில் வலது முழங்காலில் காயமடைந்த ஜோகோவிச், முதலுதவி எடுத்துக் கொண்ட பின் தொடர்ந்து விளையாடினார். காயத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதால் இத்தொடரில் பாதியில் விலகினார் ஜோகோவிச். இதனால் இவரது 'நம்பர்-1' இடம் பறிபோகிறது.