ADDED : செப் 19, 2026 10:01 PM

சியோல்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதிச் சுற்றில் ஏமாற்றிய இந்திய அணி 1-3 என, தென் கொரியாவிடம் தோல்வியடைந்தது.
தென் கொரியாவின் சியோல் நகரில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதிச் சுற்றின் 'ரவுண்டு-2' போட்டி நடந்தது. இதில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல், தக் ஷினேஸ்வர் சுரேஷ் தோல்வியடைய, இந்திய அணி 0-2 என பின்தங்கி இருந்தது.
இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, தக் ஷினேஸ்வர் சுரேஷ் ஜோடி, தென் கொரியாவின் ஜி-சங் நாம், உய்-சங் பார்க் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, 2வது செட்டை 3-6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இந்திய ஜோடி 6-3 என வென்றது. ஒரு மணி நேரம், 44 நிமிடம் நீடித்த போட்டியில் ஸ்ரீராம் பாலாஜி, தக் ஷினேஸ்வர் ஜோடி 6-3, 3-6, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மாற்று ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், தென் கொரியாவின் சூன்வூ குவோன் மோதினர். இதில் ஏமாற்றிய சுமித் நாகல் 1-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
முடிவில் இந்திய அணி 1-3 என்ற கணகக்கில் தோல்வியடைந்தது. இனி, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டேவிஸ் கோப்பையில் இந்திய அணி தகுதிச் சுற்றுக்கான 'ரவுண்டு-1' போட்டியில் விளையாட உள்ளது. இத்தொடரின் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசிய அணியானது தென் கொரியா.
