ADDED : பிப் 04, 2024 08:15 PM

இஸ்லாமாபாத்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 4-0 என பாகிஸ்தானை வீழ்த்தியது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப்' சுற்று நடந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலையில் இருந்தது.
இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி, பாகிஸ்தானின் அகீல் கான், முசாமில் முர்டசா ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
மாற்று ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நிக்கி கலியாண்டா பூனாச்சா, பாகிஸ்தானின் சோயிப் முகமது மோதினர். இதில் நிக்கி 6-3, 6-4 என வெற்றி பெற்றார்.
முடிவில் இந்திய அணி 4-0 என வெற்றி பெற்று, 'வேர்ல்டு குரூப்-1' சுற்றுக்கு முன்னேறியது. தவிர டேவிஸ் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 8 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.