/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
மூன்றாவது சுற்றில் ஜோகோவிச்: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
/
மூன்றாவது சுற்றில் ஜோகோவிச்: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
மூன்றாவது சுற்றில் ஜோகோவிச்: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
மூன்றாவது சுற்றில் ஜோகோவிச்: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
ADDED : ஆக 29, 2024 10:21 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் சபலென்கா உள்ளிட்டோர் முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், லாஸ்லோ டிஜெரே மோதினர். இதில் ஜோகோவிச் 6-4, 6-4, 2-0 என முன்னிலையில் இருந்த போது, சகவீரர் காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 6-4, 6-4 என ஸ்பெயினின் பாடிஸ்டா அகுட்டை வீழ்த்தினார். மற்ற 2வது சுற்று போட்டிகளில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், நார்வேயின் காஸ்பர் ரூட், பல்கேரியாவின் டிமிட்ரோவ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
சபாஷ் சபலென்கா: பெண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' அமெரிக்காவின் கோகோ காப், ஜெர்மனியின் டட்ஜனா மரியா மோதினர். அபாரமாக ஆடிய கோகோ காப் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா 6-3, 6-1 என இத்தாலியின் லுாசியா புரோன்செட்டியை வீழ்த்தினார்.
மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் அமெரிக்காவின் மடிசன் கீஸ், ஸ்பெயினின் படோசா, பெலாரசின் விக்டோரியா அசரன்கா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
நடப்பு விம்பிள்டன் சாம்பியன் செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 4-6, 5-7 என பெல்ஜியத்தின் எலெனா-கேப்ரியலாவிடம் தோல்வியடைந்தார்.
பாலாஜி, பாம்ப்ரி அபாரம்
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி 6-3, 6-4 என அமெரிக்காவின் ரியான், பாட்ரிக் ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, அர்ஜென்டினாவின் கைடோ ஆன்ட்ரியோசி ஜோடி 5-7, 6-1, 7-6 என நியூசிலாந்தின் மார்கஸ் டேனியல், மெக்சிகோவின் மிகுயல் ரெய்ஸ்-வரேலா ஜோடியை வென்றது.