மூன்றாவது சுற்றில் ரிபாகினா: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
மூன்றாவது சுற்றில் ரிபாகினா: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
ADDED : செப் 04, 2026 10:52 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு கஜகஸ்தானின் ரிபாகினா, போலந்தின் ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப் உள்ளிட்டோர் முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயினின் ஜெசிகா மனெய்ரோ மோதினர். இதில் ரிபாகினா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-2 என, அர்ஜென்டினாவின் நாடியா போடோரோஸ்காவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-4, 7-6 என ஸ்பெயினின் பவுலா படோசாவை தோற்கடித்தார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-2, 5-7, 6-1 என, செக்குடியரசின் கரோலினா சினியகோவாவை வென்றார்.
பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா எலா 6-1, 6-4 என, உக்ரைனின் ஒலினிகோவாவை வீழ்த்தினார். மற்ற 2வது சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, மடிசன் கீஸ், ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
ஸ்வெரேவ் அபாரம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், பிரான்சின் குவென்டின் ஹாலிஸ் மோதினர். நான்கு மணி நேரம், 33 நிமிடம் நீடித்த போட்டியில் ஸ்வெரேவ் 6-4, 4-6, 7-6, 6-7, 6-3 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 6-0, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் மட்டியா பெல்லுச்சியை வீழ்த்தினார்.
மற்ற 2வது சுற்று போட்டிகளில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், பிரான்சின் கேயல் மோன்பில்ஸ் தோல்வியடைந்து வெளியேறினர்.
