ADDED : ஏப் 19, 2026 09:44 PM

லிஸ்பன்: ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஆஸ்திரியாவின் நீல் ஓபர்லைட்னர் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
போர்ச்சுகலில், ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஆஸ்திரியாவின் நீல் ஓபர்லைட்னர் ஜோடி, கொலம்பியாவின் நிக்கோலஸ் பாரியன்டோஸ், உருகுவேயின் ஏரியல் பெஹார் ஜோடியை சந்தித்தது. 'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 6-7 என இழந்த இந்தியா-ஆஸ்திரிய ஜோடி, 2வது செட்டை 6-4 எனக் கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' அசத்திய ஸ்ரீராம் பாலாஜி ஜோடி 11-9 என வென்றது.
முடிவில் ஸ்ரீராம் பாலாஜி, ஓபர்லைட்னர் ஜோடி 6-7, 6-4, 11-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இது, ஸ்ரீராம் பாலாஜி கைப்பற்றிய 18வது ஏ.டி.பி., சேலஞ்சர் இரட்டையர் பட்டம். தவிர இது, இந்த ஆண்டு இந்த ஜோடி கைப்பற்றிய 4வது பட்டம். ஏற்கனவே பாங்காக், பஹ்ரைன், பிரான்சில் நடந்த தொடர்களில் கோப்பை வென்றிருந்தது.
