
இந்தியன் வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் விளையாட இந்தியாவின் சுமித் நாகல் 'லக்கி லுாசர்' முறையில் தகுதி பெற்றார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏ.டி.பி., இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், தென் கொரியாவின் சியோங்-சான் ஹாங்கிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்க இருந்த ஸ்பெயினின் ரபெல் நடால் கடைசி நேரத்தில் விலகினார். இதனையடுத்து தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் தோல்வியடைந்த வீரர்களின் தரவரிசை அடிப்படையில் இந்தியாவின் சுமித் நாகல், 'லக்கி லுாசர்' முறையில் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஏ.டி.பி., ஒற்றையர் தரவரிசையில் 101வது இடத்தில் உள்ள சுமித் நாகல், முதல் சுற்றில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை எதிர்கொள்கிறார்.
இதுகுறித்து சுமித் நாகல் கூறுகையில், ''இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் முதன்முறையாக பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அதிக எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது,'' என்றார்.

