/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
போராடி வென்றார் சபலென்கா * நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்
/
போராடி வென்றார் சபலென்கா * நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்
போராடி வென்றார் சபலென்கா * நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்
போராடி வென்றார் சபலென்கா * நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்
ADDED : ஜன 23, 2026 11:11 PM

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் பெலாரசின் சபலென்கா.
மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, பெலாரசின் சபலென்கா, 55வது இடத்திலுள்ள ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடபோவாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை சபலென்கா 7-6 என வென்றார். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 'டை பிரேக்கருக்கு' சென்று, 7-6 என வசப்படுத்தினார். 2 மணி நேரம், 4 நிமிடம் நீடித்த இப்போட்டியின் முடிவில் சபலென்கா 7-6, 7-6 என போராடி வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் கோகோ காப், 3-6, 6-0, 6-3 என சக வீராங்கனை பாப்டிஸ்டியை வீழ்த்தி, நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார். உக்ரைனின் ஸ்விட்டோலினா, 7-6, 6-3 என ரஷ்யாவின் ஸ்னைடரை வென்றார். மற்ற மூன்றாவது சுற்று போட்டிகளில் கஜஸ்தானின் புடின்செவா, செக் குடியரசின் முசோவா, ரஷ்யாவின் ஆன்ட்ரீவா வெற்றி பெற்றனர்.
அல்காரஸ் அபாரம்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர், ஸ்பெயினின் அல்காரஸ், 32 வது இடத்திலுள்ள பிரான்சின் மவுடெட் மோதினர். 2 மணி நேரம், 7 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அல்காரஸ், 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய, நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஜெர்மனியின் ஜிவரேவ், 7-5, 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் நோரியேவை வென்றார். ரஷ்யாவின் மெத்வெடேவ், 6-7, 4-6, 7-5, 6-0, 6-3 என இத்தாலியின் மரோஜ்சனை வீழ்த்தினார்.

