ADDED : மே 26, 2026 11:20 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சபலென்கா.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலகின் 'நம்பர்-1' வீராங்கனை பெலாரசின் சபலென்கா, 50 வது இடத்திலுள்ள ஸ்பெயினின் பவுசாசை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம், 16 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சபலென்கா, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
உலகின் 'நம்பர்-17' வீராங்கனை, அமெரிக்காவின் இவா ஜோவிச், 6-4, 6-2 என, பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா எலாவை சாய்த்தார். செக் குடியரசின் டோனா வெகிச், 6-3, 6-2 என பிரான்சின் டியுபெல்லோவை வீழ்த்தினார். கிரீசின் மரியா சக்காரி, 7-5, 7-6 என செக் குடியரசின் நோஸ்கோவானை வென்றார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் ஒசாரியோ (கொலம்பியா), ஒசாகா (ஜப்பான்), கோகோ காப், கெஸ்லர், அனிசிமோவா (அமெரிக்கா), ஆஸ்டபென்கோ (லாட்வியா), புடின்செவா (கஜகஸ்தான்) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
மெத்வெடேவ் தோல்வி
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வடேவ், 2-6, 6-1, 1-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் ஆஸ்ரேலியாவின் வால்டனிடம் போராடி தோல்வியடைந்தார். பிரான்சின் மான்பில்ஸ், 2-6, 3-6, 6-3, 6-2, 0-6 என சக வீரர் காஸ்டனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ரஷ்யாவின் ரூபலெவ், 6-3, 6-7, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் பெருவின் இக்னாசியோவை வீழ்த்தினார்.
பாலாஜி ஜோடி அபாரம்
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, பிரேசிலின் டிமோலினெர் ஜோடி, 6-3, 4-6, 6-3 என ஜெர்மனியின் பிரான்ட்ஜென், நெதர்லாந்தின் ஹாசே ஜோடியை வீழ்த்தியது.
