ADDED : ஏப் 20, 2026 11:10 PM

வில்லெனா: ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் டென்னிசிற்கு அடுத்ததாக போற்றப்படுவது ஐ.டி.எப்., 'ஜூனியர் 300' தொடர். உலக ஜூனியர் அரங்கில் முன்னணியில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பிரான்சில் நடந்த இத்தொடரில் ஜூனியர் தரவரிசையில் 47வது இடத்திலுள்ள இந்தியாவின் 16 வயது மாயா ரேவதி களமிறங்கினார்.
பைனலில் மாயா, ஸ்பெயினின் 15 வயது வீராங்கனை பாவோலா பினோராவை ('நம்பர்-34') சந்தித்தார். முதல் செட்டை 4-6 என இழந்தார். இரண்டாவது செட்டில் 3-5 என பின்தங்கி, தோல்வியை நெருங்கினார்.
இதன் பின் எழுச்சி பெற்ற மாயா, தொடர்ந்து 4 'கேம்களை' வசப்படுத்தி, 7-5 என செட்டை கைப்பற்றினார். அடுத்து நடந்த மூன்றாவது, கடைசி செட்டை மாயா 6-4 என வென்றார்.
2 மணி நேரம், 50 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் மாயா, 4-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார். 2026ல் இவர் வென்ற முதல் ஐ.டி.எப்., கோப்பை இது. ஒட்டுமொத்தமாக 8வது ஐ.டி.எப்., பட்டமாக அமைந்தது. இதையடுத்து உலக ஜூனியர் தரவரிசையில் முதன் முறையில் 'டாப்-30' பட்டியலில் நுழைந்தார் மாயா.
