/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
பிரகதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
/
பிரகதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : மார் 12, 2025 08:17 PM

அரியலுார்:உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
அரியலுார் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற இக்கோவில், உலகப் புரதான சின்னமாக அறிவிக்கப்பட்டு யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக தேரோட்ட விழா கோலாகலமாக நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வசந்த உற்சவம் மற்றும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான மாசி மக தேரோட்டம் நேற்று முன் தினம் நடந்தது.
விழாவையொட்டி, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., கண்ணன் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழு தலைவர் கோமகன், செயல் அலுவலர் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
கோவிலை வலம் வந்த தேர், ராஜவீதி வழியாக முக்கிய வீதிகளில் வலம் வந்தது. சுவாமி மற்றும் அம்பாள் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது, கொட்டும் மழை என்று பாராமல், அரியலுார், கடலுார் தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
இதைத் தொடர்ந்து தீர்த்தவாரி நேற்று நடந்தது. விழா ஏற்பாடுகளை சோளீஸ்வரர் வழிபாட்டு குழுமம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.