/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காஞ்சிபுரம், செங்கையில் கட்டுமான பணி முடங்கும்...அபாயம்
/
காஞ்சிபுரம், செங்கையில் கட்டுமான பணி முடங்கும்...அபாயம்
காஞ்சிபுரம், செங்கையில் கட்டுமான பணி முடங்கும்...அபாயம்
காஞ்சிபுரம், செங்கையில் கட்டுமான பணி முடங்கும்...அபாயம்
ADDED : மார் 08, 2025 11:55 PM
*
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட கல் அரவை ஆலைகளில் இருந்து வினியோகிக்கப்படும் 'எம் - சாண்ட்', ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலையை, 30 சதவீதம் வரை, குவாரி உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளனர். இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், கட்டுமானப் பணி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர், பினாயூர் உள்ளிட்ட இடங்களில் 50 கல் குவாரிகள் செயல்படுகின்றன. 100க்கும் மேற்பட்ட இடங்களில், கிரஷர் எனும் கல் அரவை ஆலைகள் இயங்குகின்றன.
ஆற்று மணல் கிடைக்காததால், கிரஷர்களில் அரைக்கப்படும் எம் - சாண்ட் மண்ணிற்கு கிராக்கி அதிகமாக உள்ளது.
இந்நிலையில், எம் - சாண்ட், ஜல்லிக்கற்கள் விலையை, குவாரி உரிமையாளர்கள் திடீரென தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்.
அதாவது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் எம் - சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலையை 30 சதவீதம் வரை தற்போது உயர்த்தியிருப்பது, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எம் - சாண்ட் மணல், இப்போது 4,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பூச்சு வேலைக்கு பயன்படும் 'பி - சாண்ட்' 4,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த விலை, கட்டுமானப் பணியிடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் துாரத்திற்கு ஏற்ப மேலும் கூடுதலாகி உள்ளது.
அதேபோல், கருங்கல் ஜல்லி ஒரு யூனிட் 3,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 3,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 30 சதவீதம் வரை கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் நடக்கும் கட்டுமான தேவையை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் குவாரிகளும், கிரஷர்களும் பெரும்பாலும் பூர்த்தி செய்து வருகின்றன.
இந்நிலையில் இந்த திடீர் விலை உயர்வு, கட்டுமானத் திட்ட மதிப்பில் கூடுதல் செலவினங்களை ஏற்படுத்துவதாக, வீடு கட்டுவோர் தெரிவிக்கின்றனர்.
அதாவது, சிறிய அளவிலான வீடு கட்டுவோருக்கு மொத்த செலவினத்தில், 30,000 முதல், 50,000 ரூபாய் வரை கூடுதலாக செலவாவதால், வீடு கட்டுவோர் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, எம் - சாண்ட் விற்பனை செய்வோர் கூறியதாவது:
எம் - சாண்ட், ஜல்லிக்கற்கள் விலை உயர்வு, தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. கிரஷர்களில் இருந்து கட்டுமான இடங்களுக்கான இடைவெளியை கணக்கிட்டு, இந்த விலை உயர்வு சற்று மாறுபடும்.
அதாவது, லாரி வாடகை காரணமாகவே விலை நிர்ணயம் செய்வதில் மாறுபாடு இருக்குமே தவிர, பெரிய அளவில் விலை மாற்றமில்லை. நீண்ட நாட்களாக விலை நிர்ணயத்தில் பெரிய மாற்றமில்லாமல் இருந்தது. இப்போதுதான் விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கட்டுமானப் பணிக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ள, 'எம் - சாண்ட்' விலையை, குவாரி உரிமையாளர்கள் அடாவடியாக உயர்த்தி உள்ளதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் கட்டுமானப் பணி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.